இலங்கையின் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணாமல் போனமை குறித்து ஆராய்வதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) மீண்டும் கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இக்குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் இன்று (23) இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு திறைசேரிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்திற்கு வருமாறு அறிவிப்பு
இது குறித்து கருத்துரைத்த அக்குழுவின் உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க,
“மத்திய வங்கியும், நிதி அமைச்சும் இந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்துள்ளன.

நிதி அமைச்சு ஒரு வாரத்திற்கு முன்பே வழங்கியிருந்தது. மத்திய வங்கி 4-5 நாட்களுக்கு முன்பு வழங்கியுள்ளது.
இது குறித்து கலந்துரையாடி, இதில் எங்கு முரண்பாடு இருந்தது, எங்கு பிரச்சினை இருந்தது என்பதை வெளிப்படுத்தும் கூட்டம் இன்று பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெறவுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளருக்கும் அதன் பணியாளர்களுக்கும், மத்திய வங்கி ஆளுநருக்கும் அதற்குத் தேவையான பணியாளர்களுக்கும் இன்று நாடாளுமன்றத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

