Last Updated:
கேரளம் 2026 சட்டமன்றத் தேர்தல்: 140 தொகுதிகளில் 883 வேட்பாளர்கள், எல்.டி.எஃப் மற்றும் யு.டி.எஃப் இடையே நேரடி போட்டி என இருக்கும் கேரளத்தின் முடிவு நாளை தெரியவரும்.
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் ஒன்றான கேரளம் மாநிலத்தின் தேர்தல் முடிவுகளும் நாளை (மே 4ஆம் தேதி) வெளியாக இருக்கும் சூழலில் சில அடிப்படை தரவுகளை பார்ப்போம்.
கேரளம் மாநிலத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் எல்.டி.எஃப். கூட்டணி தொடர்ந்து 10 வருடங்களாக ஆட்சியில் இருந்து வருகிறது. இதனை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப். கூட்டணி நேரடி போட்டியில் இருக்கிறது. பாஜக தலைமையிலான என்.டி.ஏ. ஆட்சியை பிடிக்க தீவிரமாக இருந்துவருகிறது.
கேரளம் மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளில் மொத்தம் 2.71 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 2026 கேரளம் மாநிலத் தேர்தலில் 79.63% வாக்குகள் பதிவாகியுள்ளன. 883 வேட்பாளர்கள் போட்டியிட்ட கேரளம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்பட இருக்கிறது.
கேரளத்தில் 43 இடங்களில் 140 வாக்கு எண்ணும் மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. தொகுதிகளுக்கு ஏற்றவாறு வாக்கு எண்ணும் சுற்றுகள் மாறுபடும் நிலையில், அதிகபட்சமாக 14 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் ஒரு சுற்றில் எண்ணப்படும்.
காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகளும், அதனைத் தொடர்ந்து இ.வி.எம். வாக்குகளும் எண்ணப்பட இருக்கின்றன.

