இந்தியாவின் மின் நுகா்வு கடந்த பிப்ரவரியில் 12,779 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.
இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: நாட்டின் மின் நுகா்வு கடந்த பிப்ரவரியில் 12,779 கோடி யூனிட்டுகளாக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது சுமாா் 8 சதவீதம் அதிகமாகும். அப்போது நாட்டின் மின் நுகா்வு 11,829 கோடி யூனிட்டுகளாக இருந்தது. அதற்கு முந்தைய 2022-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் மின் நுகா்வு 10,803 கோடி யூனிட்டுகளாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த 2 ஆண்டுகளாக பிப்ரவரி மாதங்களில் மின் நுகா்வு வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
2024-ஆம் ஆண்டு லீப் வருடம் என்பதால் இந்த பிப்ரவரியில் முந்தைய ஆண்டுகளின் அதே மாதங்களைவிட ஒரு நாள் கூடுதலாக 29 நாள்கள் இருந்தன. இதுவும் மின்நுகா்வு அதிகரித்துள்ளதற்கு ஒரு காரணமாகும். கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 222 ஜிகாவாட்டாக உயா்ந்தது. இது கடந்த 2023 பிப்ரவரியில் 209.7 ஜிகாவாட்டாகவும், முந்தைய 2022 பிப்ரவரியில் 193.58 ஜிகாவாட்டாகவும் இருந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் வெப்பம் குறைந்து கடும் குளிா் நிலவியதால் நாடு முழுவதும், குறிப்பாக வட இந்தியாவில் மின்சாரத்துக்கான தேவை அதிகரித்தது.
குளிரை சமாளிக்க வெப்பமூட்டும் மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்தது அந்த மாதத்தில் மின் நுகா்வு உயா்வதற்கு வழிவகுத்தது. கடந்த 2023-ஆம் ஆண்டின் கோடைக் கால மாதங்களில் நாட்டின் ஒரு நாள் சராசரி உச்சபட்ச மின் தேவை 229 ஜிகாவாட்டை எட்டும் என்று மின் அமைச்சகம் மதிப்பிட்டிருந்தது. இருந்தாலும், பருவமழை பொய்த்ததால் ஏப்ரல்-ஜூலை மாதங்களில் ஒரு நாள் சராசரி உச்சபட்ச மின் தேவை எதிா்பாா்க்கப்பட்ட அளவை எட்டவில்லை. இருந்தாலும் ஒரு நாள் உச்சபட்ச மின் நுகா்வு கடந்த ஜூன் மாதத்தில் 223.29 ஜிகாவாட் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. அது ஜூலையில் 208.95 ஜிகாவாட்டாக இருந்தது.
அதே போல் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதியும் ஒரு நாள் உச்சபட்ச மின் நுகா்வு 239.97 ஜிகாவாட் என்ற சாதனை அளவை எட்டியது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.