Last Updated:
இங்கிலாந்து வாழ் தமிழ் சிறுமி போதனா சிவானந்தன், 11 வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று உலக சாதனை படைத்தார். இவர் சதுரங்க வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் இந்த பட்டத்தை வென்றவர்.
சதுரங்க விளையாட்டு வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைக் கைப்பற்றி இங்கிலாந்து வாழ் தமிழ் சிறுமி போதனா சிவானந்தன் சாதனை படைத்துள்ளார்.
சதுரங்க போட்டியில் மிக உயரிய பட்டமான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைக் கைப்பற்றி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ள இந்த சிறுமி தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். 11 வயதே ஆன போதனா சிவநந்தன், இங்கிலாந்து நாட்டுக்காக சதுரங்கம் விளையாடி வருகிறார். இங்கிலாந்தின் கரோவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் போதனா.
இவரது பெற்றோர் திருச்சியை பூர்விகமாகக் கொண்டவர்கள்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் 5 வயதான போதனாவுக்கு சதுரங்க விளையாட்டில் ஆர்வம் வந்திருக்கிறது. முதலில் ஆன்லைனில் இருக்கும் இலவச போட்டிகளை விளையாடி வந்தார். வார இறுதி நாட்களில் சதுரங்க போட்டிகளில் பங்கேற்று வந்தார். ஏழு வயதாக இருந்தபோதே, ஐரோப்பியப் பள்ளி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற 24 ஆட்டங்களிலும் அவர் வெற்றி பெற்று கவனம் ஈர்த்தார்.
ஐரோப்பியன் ப்ளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை எட்டு வயதில் வென்றார் போதனா. அப்போது பிரதமராக இருந்த ரிஷி சுனக், அவரை நேரில் அழைத்துப் பாராட்டினார். 2024 ஆம் ஆண்டு ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடருக்கு இங்கிலாந்து அணிக்காகக் களம் கண்டார் போதனா. இங்கிலாந்து வரலாற்றிலேயே இவ்வளவு சின்ன வயதில் பெரிய அளவிலான தொடருக்கு தகுதி பெற்றவர் போதனா தான்.
தனது கூர்மையான சதுரங்க நகர்வுகளாலும் வியக்க வைக்கும் உத்திகளாலும் சர்வதேசச் சதுரங்க அரங்கில் முன்னணி வீராங்கனைகளுக்குச் சவால் விடுத்து வந்தார். தனது 10 வயதில், இங்கிலாந்து சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பீட்டர் வெல்ஸை வீழ்த்தி, ஒரு கிராண்ட்மாஸ்டரைத் தோற்கடித்த மிக இளைய பெண் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
இந்நிலையில், உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற 46 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இங்கிலாந்து மகளிர் அணிக்காக களமிறங்கிய போதனா சிவானந்தன், ஒட்டுமொத்தமாக 11 சுற்றுகளில் 8 புள்ளிகளைக் குவித்து அசத்தினார். இந்த தொடரின் கடைசிச் சுற்றில், எஸ்டோனியா நாட்டின் கிராண்ட்மாஸ்டரான மாய் நர்வாவுக்கு (Mai Narva) எதிராகக் கடுமையாகப் போராடி ஆட்டத்தைச் சமன் செய்தார்.
முன்னதாக இத்தொடரில் பிரேசிலின் முன்னணி வீராங்கனை ஜூலியானா தெராவோ (Juliana Terao) உட்பட பல சர்வதேச வீராங்கனைகளைத் தோற்கடித்துத் தனது திறமையை நிரூபித்தார். இதன் மூலம் உலகிலேயே மிகக் குறைந்த வயதில் மகளிர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற வீராங்கனையாக வரலாற்றுச் சாதனை படைத்தார். இதற்கு முன்னர் 12 வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றிருந்த ரஷ்யாவின் கடெரினா லாக்னோவின் சாதனையை போதனா முறியடித்துள்ளார். எதிர்காலத்தில் உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவதே தனது இலக்கு என போதனா தெரிவித்துள்ளார்.
உலக அளவில் தமிழர்களின் பெருமையை விளையாடு உலகின் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ள இச்சிறுமியின் வரலாற்றுச் சாதனைக்கு, உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


