நாடாளுமன்ற கேள்வி நேரத்தில், மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இத்திட்டத்தின் முக்கியச் சிறப்பம்சங்கள் மற்றும் மாநில அளவிலான செயல்பாடுகள் குறித்த பார்க்கலாம்.
இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை, ₹2,08,419.04 கோடி மதிப்பிலான இழப்பீட்டு கோரிக்கைகள் (Total Reported Claims) பதிவாகியுள்ளன. இதில், ₹2,02,491.64 கோடி ரூபாய் (Total Paid Claim) விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இப்பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயனடைவோர் விகிதம் 97.16 சதவீதமாக உள்ளது.

திட்டம் தொடக்கப்பட்ட ஆரம்பக் காலத்தில் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு காப்பீட்டை கோர முடியாது என்ற நிலை இருந்தது. இருப்பினும், மாநில அரசுகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, 2020-ஆம் ஆண்டு காரிஃப் பருவம் முதல், மாநில அரசுகளின் சொந்த செலவில் வனவிலங்கு சேதங்களுக்கும் காப்பீடு வழங்கும் கூடுதல் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக, அனைத்து மாவட்டங்களிலும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2016இல் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பயிர்களை பயிரிடும் அனைத்து கடன் பெறும் மற்றும் கடன்பெறாத (இணை சாகுபடியாளர் /குத்தகைதாரர்) விவசாயிகளும் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ₹47,759.47 கோடி மதிப்பிலான காப்பீட்டுக் கோரிக்கைகள் பதிவாகியுள்ளன. இதில் 99.46% கோரிக்கைகள் வெற்றிகரமாக பரிசீலிக்கப்பட்டு இழப்பீடு வழங்கபட்டுள்ளது. இதேபோல, கர்நாடகா (₹33,350.12 கோடி), மத்தியப் பிரதேசம் (₹20,247.48 கோடி)அதிக மதிப்பிலான இழப்பீடு தொகையை வழங்கியுள்ளன.
தேசிய அளவில் பதிவான மொத்த காப்பீட்டுக் கோரிக்கைகளில் பெரும் பகுதி மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டுமே குவிந்துள்ளது. நாட்டின் மொத்தக் கோரிக்கை தொகையான ₹2,08,419.04 கோடியில், இந்த நான்கு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் மட்டுமே இணைந்து ₹1,36,000 கோடிக்கும் அதிகமான தொகையைப் பெற்றுள்ளன. இது தேசிய அளவிலான மொத்தக் கோரிக்கைகளில் கிட்டத்தட்ட 66 சதவீதப் பங்காகும்.

