Last Updated:
கடந்த காலங்களில் பல லட்சம் ஊழல் என தலைப்புச் செய்திகள் வரும். ஆனால், தற்போது அப்படியான செய்திகள் எதுவும் வரவில்லை.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று தொடங்கியது.
இதில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். கும்பமேளா கூட்ட நெரிசல், எல்லையில் சீனா அத்துமீறல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து காரசாரமாக விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி இன்று மாலை பதிலளித்துப் பேசினார். அப்போது அவர், “மக்கள் வாய்ப்பளித்ததன் மூலம் 14வது முறையாக குடியரசுத் தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசுகிறேன். குடியரசுத் தலைவர் உரையில் அவர், அடுத்த 25 ஆண்டுகள் இந்தியா எப்படி இருக்கும் என்பதைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளாக வருமையிலிருந்து மீட்க வேண்டும் என்ற குரலை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வருமையிலிருந்து வெளியே வந்துள்ளனர். அதனை நினைத்து பெருமை கொள்கிறேன். தற்போது வரை 4 கோடி ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டிருக்கிறது. 12 கோடிக்குமான கழிப்பறைகளைக் கட்டி பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளோம். 12 கோடிகளுக்கும் அதிகமான வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஏழையின் வீடுகளில் புகைப்படம் எடுத்தவர்களுக்கெல்லாம் அவர்கள் பற்றிப் பேசும்போது அழற்சி தான் ஏற்படும்.
கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறோம். அதில், எத்தனால் கலப்பின் மூலம் இறக்குமதியைக் குறைத்துள்ளோம். அதன் மூலம், பெட்ரோல், டீசல் விலையில் 1 லட்சம் கோடி ரூபாய் வரை சேமித்துள்ளோம். அது விவசாயிகளுக்குச் சென்றுள்ளது. கடந்த காலங்களில் பல லட்சம் ஊழல் என தலைப்புச் செய்திகள் வரும். ஆனால், தற்போது அப்படியான செய்திகள் எதுவும் வரவில்லை. பல லட்சம் கோடிகளைச் சேமிக்கிறோம். அதனைக் கண்ணாடி மாளிகைகளைக் கட்ட பயன்படுத்தாமல், இந்தியாவைப் புதிதாகக் கட்டமைக்கப் பயன்படுத்துகிறோம்” என்று பேசினார்.
February 04, 2025 5:42 PM IST