கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணியின் ஓப்பனர்களான டி காக், சுனில் நரேன் பேட்டிங் செய்தனர்.
முதல் ஓவரின் முடிவிலேயே டி காக் ஒரு ரன்னுடன் நடையை கட்டி அதிர்ச்சி கொடுத்தார். மறுமுனையின் ஆடிய சுனில் நரேன் ஏழு ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்து இறங்கிய ரஹானே 38 ரன்கள் எடுத்தார். ரகுவன்ஷி அரை சதம் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் பிறகே கொல்கத்தா அணியின் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. வெங்கடேஷ் ஐயர் 60, ரிங்கு சிங் 32 என 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்திருந்தது கொல்கத்தா அணி.
201 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் ஆடியது. டிராவிஸ் ஹெட் 4 ரன்கள், அபிஷேக் சர்மா 2, இஷான் கிஷன் 2 என அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. தொடர்ந்து இறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி (19), கமிந்து மெண்டிஸ் (27), கிளாசன் (33) ஆகியோர் ஓரளவு ஸ்கோரை ஏற்ற முயன்றாலும், அடுத்து இறங்கிய அங்கித் வர்மா, பேட் கம்மின்ஸ், ஹர்ஷா படேல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை தரவில்லை. இதனால் 16.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.