Last Updated:
இந்திய அணியின் தேர்வுக்குழு எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு 15 இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்ட புதிய குழுவை உருவாக்கியுள்ளது.
இந்தியக் கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் சர்வதேசக் கிரிக்கெட் கெரியர் நிறைவுக்கு வருகிறதா என்ற கேள்வி விளையாட்டு உலகில் எழுந்துள்ளது. 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேற முக்கியக் காரணமாக இருந்த ஷமி, 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறாமல் இருந்து வருகிறார்.
உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், அடுத்து வரவிருக்கும் இலங்கைத் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியிலும் அவர் சேர்க்கப்படவில்லை.
‘ஸ்போர்ட்ஸ்ஸ்டார்’செய்தி தளம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்திய அணியின் தேர்வுக்குழு எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு 15 இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்ட புதிய குழுவை உருவாக்கியுள்ளது. அனைத்து வடிவக் கிரிக்கெட்டிற்கும் (Test, ODI, T20) பயன்படும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 15 பேர் கொண்ட பட்டியலில் முகமது ஷமியின் பெயர் இடம்பெறவில்லை.
2027 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியைக் கருத்தில் கொண்டு, இளம் பந்துவீச்சாளர்களுக்கு அதிக சர்வதேசப் போட்டிகளில் வாய்ப்பளித்து அவர்களைத் தயார்படுத்த தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கே. ஸ்ரீகாந்த் இதுகுறித்துப் பேசுகையில், “முகமது ஷமி ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சாளர். அவரை அணி நிர்வாகம் முற்றிலுமாகப் புறக்கணித்து வருவது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது” என்று தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் இளம் வீரர்களுக்கான மாற்றங்கள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், 35 வயதைக் கடந்துள்ள முகமது ஷமி மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவது மிகவும் கடினம் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.


