Last Updated:
எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. டொனால்ட் டிரம்ப் மஸ்கின் அதிகாரத்தை கட்டுப்படுத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சராக இல்லாத போதும், நிர்வாக ரீதியான செயல்பாட்டில் அவரது துறை உள்ளதால் எலான் மஸ்க் பங்கேற்றார். இருக்கையில் அமராமல் நின்றுகொண்டே தனது கருத்துக்களை கூறினார்.
அப்போது, எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வெளியுறவுத்துறையில் பணி நீக்கம் செய்யக்கோரி தாம் பரிந்துரை செய்த போதும் மார்கோ அதை செய்யவில்லை என எலான் குற்றஞ்சாட்டினார்.
வெளியுறவுத்துறையில் பணியாற்றி வந்த 1,500 பேர் விருப்ப ஓய்வு பெற ஒப்புக்கொண்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ விளக்கம் தந்தார். இதனால் அவர்களை பணி நீக்கம் செய்ய முடியாது என்றும் ஒருவேளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்றும் மார்கோ கிண்டல் தொனியில் பதிலளித்தார்.
இதையும் படியுங்கள் : கேரளாவின் காசர்கோடுக்கும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கும் உள்ள தொடர்பு.. மன்னர் சார்லஸின் தனி உதவிச் செயலாளர் ஷம்சுதீன் யார்?
இதனால் டென்ஷனான எலான் மஸ்க், தொலைக்காட்சிகளில்தான் நன்றாக பேசுகிறீர்கள் என்றார். இதன் மூலம் செயல்பாட்டில் மந்தமாக உள்ளதாகவும் மறைமுகமாக விமர்சித்தார். இருவரும் வார்த்தை போரில் ஈடுபட்டதை டொனால்ட் டிரம்ப் கைகளை கட்டியபடி அமைதியாக வேடிக்கை பார்த்தார். சிறிது நேரத்துக்கு பிறகு குறுக்கிட்ட டொனால்ட் டிரம்ப், ஊடக விவாதங்களை நன்றாக கையாள்கிறீர்கள் என எலானின் கிண்டலையே மார்கோவுக்கு பாராட்டாக மாற்றினார்.
அதன்பிறகு, அரசு செயல் துறையின் பணி என்பது பரிந்துரை செய்வது தான் என்றும் அதில் இறுதி முடிவு எடுப்பது அரசு அல்லது துறை சார்ந்த தலைவர்களுடையது என்றும் எலான் மஸ்கின் வசம் இருந்த கட்டற்ற அதிகாரத்துக்கு கடிவாளம் போட்டார் ட்ரம்ப்.
அதன் தொடர்ச்சியாக மோதல் குறித்து கேட்ட செய்தியாளர்களையே கலக்காரர்கள் என கடுமையான வார்த்தைகளால் ட்ரம்ப் விமர்சித்தார்.
இதனிடையே, எலான் மஸ்க், மார்கோ இடையே நடந்த வார்த்தை மோதல் குறித்த வீடியோக்கள் இணையத்தில் இருந்து உடனடியாக அகற்றப்பட்டன.
March 09, 2025 6:44 PM IST