இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் கால்பதித்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜியோ நிறுவனம் தனது அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. கடந்த காலத்தில் வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களை வாங்கி இந்தியாவில் பயன்படுத்தி வந்த சூழலை மாற்றி, 5G நெட்வொர்க், பிராட்பேண்ட், கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு (AI), ஹார்டுவேர் சாதனங்கள் மற்றும் என்டர்பிரைஸ் தீர்வுகளை இந்தியாவிலேயே சொந்தமாக உருவாக்கும் சர்வதேசத் தொழில்நுட்ப நிறுவனமாக ஜியோ உருவெடுத்து வருகிறது.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் செபியிடம் (SEBI) தாக்கல் செய்த அறிக்கையின் மூலம் இம்மாற்றம் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
ஜியோ தனது 5G சேவையை 4G நெட்வொர்க்கின் மேல் கூடுதல் அடுக்காக அமைக்காமல், முழுமையான ‘Standalone 5G’ கட்டமைப்பில் உருவாக்கியுள்ளது. 5G கோர் (Core), ரேடியோ தயாரிப்புகள் மற்றும் நெட்வொர்க்கை நிர்வகிக்கும் மென்பொருள்கள் (OSS/BSS) என அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘Made in India’ தொழில்நுட்பங்களாகும்.
மார்ச் 31, 2026 நிலவரப்படி, ஜியோ 26.85 கோடி 5G வாடிக்கையாளர்களைப் பெற்று, சீனாவிற்கு வெளியே உலகின் மிகப்பெரிய 5G சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்நிறுவனத்தில் 11,303 தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றி வருகின்றனர் (மொத்த ஊழியர்களில் 40%). மேலும், 6,817 காப்புரிமை விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, 1,009 சர்வதேசக் காப்புரிமைகளையும் பெற்றுள்ளது.
வெறும் பிராட்பேண்ட் இணைப்பை மட்டும் வழங்காமல், வீட்டின் ஒட்டுமொத்த டிஜிட்டல் தேவைகளுக்கும் ஜியோ அடிப்படையாக அமைகிறது. 2026 நிதியாண்டில் 2.71 கோடி பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை ஜியோ பெற்றுள்ளது.
ஃபைபர் கேபிள் கொண்டு செல்ல முடியாத இடங்களுக்குச் சொந்தமாக உருவாக்கிய UBR (Unlicensed Band Radio) தொழில்நுட்பம் மூலம் ‘JioAirFiber’ சேவையை வழங்குகிறது. மேலும், ‘JioCloud PC’ மூலம் தனியாக கம்ப்யூட்டர் ஹார்டுவேர் தேவைப்படாமல், டிவியிலேயே கிளவுட் வழியே கணினிச் சேவைகளைப் பயன்படுத்தும் வசதியையும், ‘JioSpaceFiber’ மூலம் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையையும் விரிவுபடுத்தி வருகிறது.
ஸ்மார்ட்போன் வாங்க முடியாத எளிய மக்களுக்காக ரூ.799 விலையில் ‘ஜியோபாரத்’ (JioBharat) போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் லைவ் டிவி, ஜியோபே (JioPay) UPI பரிவர்த்தனை, 23 மொழிகளுக்கான ஆதரவு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சாதனம், இயங்குதளம் (JioOS), நெட்வொர்க், கிளவுட் என அனைத்து வாயில்கள் மூலமாகவும் பயனர்களைத் தனது டிஜிட்டல் கட்டமைப்புடன் இணைக்கிறது.
தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குக் குறைந்த தாமதமும் (Low Latency), அதிகப் பாதுகாப்பும் கொண்ட ‘Private 5G-in-a-Box’ வசதியை வழங்கி வருகிறது. ‘JioThings’ மூலம் ஸ்மார்ட் மின்சார மீட்டர்கள் மற்றும் தெருவிளக்குகளை இணைக்கும் IoT சேவைகளைச் செய்கிறது. நெட்வொர்க் பராமரிப்பைத் தானியங்கிமயமாக்க ‘ஜியோபிரைன்’ (JioBrain) என்ற AI தளத்தையும், கூகுள் உடன் இணைந்து Google AI Pro சேவையையும் வழங்குகிறது.
கடந்த பத்தாண்டுகளில் மலிவு விலையில் டேட்டா வழங்கி லட்சக்கணக்கான இந்தியர்களை இணைத்த ஜியோ, அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவிலேயே தொழில்நுட்பத்தை உருவாக்கி, அதை உலகளவில் ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய ‘பிக் டெக்’ சக்தியாக மாறத் திட்டமிட்டுள்ளது.
