வெறும் 300 ரூபாய்க்கு ஓவன் வாங்கி ஆரம்பித்த தொழில்! இன்று ரூ.7500 கோடி மதிப்புள்ள நிறுவனம்!
குறைந்த முதலீட்டில் சிலர் தொடங்கக்கூடிய தொழில் பிற்காலத்தில் அவர்களைக் கோடீஸ்வரராக மாற்றி விடும். அப்படித்தான் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரஜினி பெக்டருக்கு நடந்தது. அன்று அவர் தனது தொழிலுக்காக வெறும் 300 ரூபாய் மட்டும் தான் முதலீடு செய்தார். ஆனால் இன்று அவருடைய நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.7,890 கோடி. ஒரு பெண்ணாக இருந்து இவ்வளவு பெரிய சாதனையை அவர் எப்படி செய்தார்? இதன் பின்னால் அவர் சந்தித்த பிரச்சனை என்ன? என்ற விபரங்களைப் பார்ப்போம்.
ரஜினி பெக்டர் கராச்சியில் பிறந்தார். ஆரம்பத்தில் லாகூரில் வசித்து வந்த இவருடைய குடும்பம் பிறகு டெல்லிக்கு குடிபெயர்ந்தது. அங்கு தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார். தனது 17-வது வயதில் லூதியானவைச் சேர்ந்த தரம்வீர் பெக்டர் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார்.
குழந்தைகள் பிறந்த பின்னர் தன்னுடைய பேஷனை நோக்கி பயணிக்கத் தொடங்கினார். ரஜினி பெக்டருக்கு பேக்கிங் மற்றும் குக்கிங்கில் ஆர்வம் அதிகம். அதற்காக பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேக்கிங் பயிற்சி பெற்றார். பின்னர் வீட்டிலிருந்தே ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ் போன்றவற்றை தயாரித்து முதலில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இலவசமாக வழங்கினார். அவருடைய குக்கிங் பிடித்துப் போகவே சிலர் அவரிடம் ஆர்டர் செய்ய தொடங்கினர்.

இதற்காக ஆரம்பத்தில் 300 ரூபாய் கொடுத்து ஒரு ஓவனை வாங்கினார். ஆரம்பத்தில் உள்ளூர் திருவிழாக்களில் ஐஸ்கிரீம், கேக், குக்கிஸ் போன்றவற்றை விற்பனை செய்தார். வழக்கம் போல ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் ஏற்படும் பிரச்சனை தான் இவருக்கும் ஏற்பட்டது. உற்பத்தி செலவுக்குக் கூட லாபம் கிடைக்காமல் நஷ்டத்தை சந்தித்தார். இதனால் தன்னுடைய பிசினஸ் வெற்றிகரமாக இருக்குமா? என்ற கேள்வி அவருக்கு எழுந்தது.
ஆனால் அப்போது அவருக்கு துணையாக இருந்தவர் அவருடைய கணவர் தரம்வீர். அவர் தொடர்ந்து ஊக்குவித்ததால் 1978-ஆம் ஆண்டு ரஜினி பெக்டர் முழுவதுமாக ஐஸ்கிரீம் தயாரிப்பில் களம் இறங்கினார். அதற்காக அவருடைய கணவர் ரூ.20,000 வழங்கி ஆதரவு அளித்தார்.
1985-ஆம் ஆண்டு பிரெட் தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஒவ்வொரு நாளும் 5,000 பிரெட் விற்பனை செய்தார். நாளடைவில் இந்த எண்ணிக்கை 50,000-ஆக அதிகரித்தது. 1990-களில் பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது. இதுவே ரஜினி பெக்டருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்திற்கு தேவையான பர்கர் பன் போன்றவற்றை 1996-ஆம் ஆண்டு முதல் விநியோகம் செய்தார்.
அதன் பின்னர் குவாக்கர் ஓட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து குவாக்கர் கிரெமிக்கா ஃபுட்ஸ் என்ற கூட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் கெட்ச்அப், மில்க் ஷேக், மயோனைஸ் போன்றவற்றையும் தயார் செய்து விற்பனை செய்தார்.
ஆரம்பத்தில் ரூ.300 முதலீடு செய்து ஆரம்பித்த தொழில் பின்னர் “மிஸஸ் பெக்டர்ஸ் ஃபுட் ஸ்பெஷாலிட்டிஸ் லிமிடெட்” என்ற பெரு நிறுவனமாக உருவெடுத்தது. நிறுவனம் வளர வளர கிரெமிக்கா மற்றும் இங்கிலீஷ் ஓவன் என இரண்டு முக்கிய பிராண்டுகளை அறிமுகம் செய்தது. இதில் போர்பன், கிராக்கர் போன்ற பிரபல பிஸ்கட்டுகள் அடங்கும்.
இந்நிறுவனம் மெக்டொனால்ட்ஸ், கேஎஃப்சி (KFC) மற்றும் பர்கர் கிங் போன்ற நிறுவனங்களுக்கும் பன் மற்றும் பேக்கரி தயாரிப்புகளை விநியோகம் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் சுமார் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் ஐபிஓ வெளியிட்டது. அதன் மூலம் ரூ.541 கோடி நிதி திரட்டப்பட்டது. தற்போது இந்த தொகை 198 மடங்கு அதிகரித்துள்ளது. நவம்பர் 2021-க்குள் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2500 கோடியை எட்டியது. 2026 ஆம் ஆண்டின், ஆகஸ்ட் 24 நிலவரப்படி மிஸஸ் பெக்டர்ஸ் ஃபுட் ஸ்பெஷாலிட்டிஸ் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.7,890 கோடியை எட்டியுள்ளது.

