International
oi-Mani Singh S
ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தனது மகன்களில் ஒருவரை ஈரான் கொலை செய்ய முயன்றதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். எனினும், ஈரான் இந்த முயற்சியில் எப்போது?, எங்கே ஈடுபட்டது? என்பது குறித்து விவரமாக எதையும் பெஞ்சமின் நெதன்யாகு கூறவில்லை.
தனது மகன்களில் ஒருவரை கொலை செய்ய ஈரான் முயற்சி செய்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த பெஞ்சமின் நெதன்யாகு இது குறித்து கூறியதாவது:-

என் மகனை கொல்ல முயன்றது
“நம்பவே முடியாத சில நிகழ்வுகள் நடைபெற்றன. எனது மகன்களில் ஒருவரை ஈரான் குறி வைத்தது. ஒரு மகனை கொலை செய்யவும் ஈரான் முயன்றது” என்று கூறினார். எனினும், பெஞ்சமின் நெதன்யாகு, தனது இந்த குற்றச்சாட்டு குறித்து கூடுதல் தகவல் எதையும் பகிரவில்லை. கொலை முயற்சி எப்படி நடைபெற்றது? அல்லது எப்போது இப்படியான ஒரு முயற்சியில் ஈரான் இறங்கியது என்ற விவரங்களை வெளியிடவில்லை.
அதேபோல, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 2 மகன்களில் எந்த மகனை ஈரான் குறிவைத்தது என்றும் தெரியவில்லை. நெதன்யாகுவிற்கு அவ்னீர் மற்றும் யாயிர் என இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இதில் யாரை ஈரான் குறிவைத்தது என்ற விவரத்தை அவர் குறிப்பிடவில்லை.
இளைய மகன் அவ்னீர்
இஸ்ரேல் பிரதமர் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவை எதிர்த்து போட்டியிட திட்டமிட்டுள்ள காடி எய்சென்கோட்டிற்கு பாதுகாப்பு வழங்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட் மறுத்துள்ளதாக வெளியான தகவல்களை வைத்து விவாதங்கள் எழுந்த நிலையில் பெஞ்சமின் நெதன்யாகு, தனது மகன் குறித்து பேசியிருக்கிறார்.
தனது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு என்பது ஆடம்பரமான ஒன்றல்ல எனவும் நெதன்யாகு கூறியுள்ளார். பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அவரது மூத்த மகன் யாயிர், கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் மியாமியில் உள்ளார். அவருக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட் பாதுகாப்பு அளித்தாகவும் கூறப்படுகிறது. இளைய மகன் அவ்னிர் பெரும்பாலும் இஸ்ரேலில்தான் வசித்து வருகிறார்.



