கோலாலம்பூர்:
மலேசியாவில் நிலவி வரும் கடும் வெப்பமான வானிலைக்கு மத்தியில், வெளிப்புற விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தங்களது பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதிகாரிகள் மற்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய வெப்பமான சூழலில், உடல் நிலையை உணர்ந்து செயல்படுவது அவசியம் என்றும், உடல் எல்லையைத் தாண்டி தீவிரமாக முயல்வது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் பினாங்கில் நடைபெற்ற 30 கி.மீ மலைப்பாதை ஓட்டப்பந்தயத்தில் (Trail Run) பங்கேற்ற 42 வயது நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து இந்த எச்சரிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது. பந்தயத்தின் முடிவில் மயங்கி விழுந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியானார்.
மருத்துவ அறிக்கையின்படி, வெப்பத்தாக்கம் (Heatstroke), தசைச் சிதைவு (Rhabdomyolysis) மற்றும் பல்வேறு உறுப்புகள் செயலிழந்ததே அவரது மரணத்திற்கு காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டில் மலேசியாவில் பதிவான இரண்டாவது வெப்பம் தொடர்பான மரணமாகும்.
இந்நிலையில் “பொதுமக்கள் தங்கள் உடல் நிலையைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதிகப்படியான சோர்வை உணர நேர்ந்தால், போட்டியில் இருந்து பின்வாங்குவது தவறல்ல. உயிருடன் இருந்தால் மீண்டும் ஒரு நாள் போட்டியில் பங்கேற்கலாம் என்று, பினாங்கு மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதாரக் குழுத் தலைவர் டேனியல் கோய் ஜி சென் கூறினார்.
அதேநேரம் பினாங்கு பாலம் சர்வதேச மாரத்தான் போன்ற பெரிய போட்டிகள், சூரிய வெப்பத்தைத் தவிர்க்கும் நோக்கில் நள்ளிரவு 1:30 மணி மற்றும் அதிகாலை 3:30 மணிக்கே தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறைத் தலைவர் வோங் ஹோன் வாய் தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான சூழலில் தற்காத்துக் கொள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் வெறும் தண்ணீரை மட்டும் குடிக்காமல், வியர்வையின் மூலம் இழக்கப்படும் உப்பை ஈடுகட்ட எலக்ட்ரோலைட் (Electrolyte) பானங்களை அருந்த வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தூர ஓட்டத்தின் போது முகம், தலை மற்றும் மார்புப் பகுதியில் அவ்வப்போது தண்ணீர் ஊற்றி உடல் வெப்பத்தைத் தணிக்க வேண்டும், அத்தோடு வெளிர் நிறத்திலான, காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும் என்றும் தலைச்சுற்றல், குமட்டல், தசைப் பிடிப்பு அல்லது கடுமையான தலைவலி ஏற்பட்டால், உடனடியாக பயிற்சியை நிறுத்திவிட்டு நிழலான இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஏற்பாட்டாளர்கள், ஒவ்வொரு 2 கி.மீ முதல் 3 கி.மீ தொலைவிலும் குடிநீர் நிலையங்களை அமைப்பதோடு, அவசர மருத்துவக் குழுவினரைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.
வெப்ப அலை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மதிய நேரங்களில் நேரடி சூரிய ஒளியில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.




