சில சந்தர்ப்பங்களில் நெருங்கிய உறவினர்கள் கூட கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்படலாம் என்பதால், தங்களுக்குச் சொந்தமில்லாத எந்தப் பொருளையும் கொண்டு செல்லச் சம்மதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விமானப் பயணிகளுக்கு, இலங்கை சுங்கத்துறை அவசர மற்றும் முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதாவது, விமானப் பயணிகள் பயணம் செய்யும் போது, தங்களுக்குத் தெரியாத நபர்களுக்கோ அல்லது ஏனையவர்களுக்கோ சொந்தமான பொதிகளை அல்லது பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டாம் என்று சுங்கத்துறை வலியுறுத்தியுள்ளது.
போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோதப் பொருட்களைக் கடத்துவதற்கு, அப்பாவிப் பயணிகள் பயன்படுத்தப்படலாம் என்று சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயணிகள் தாங்கள் எதனைக் கொண்டு செல்கிறோம் என்பதை அறியாமலேயே பாரிய குற்றச்செயல்களில் சிக்கக்கூடும் என்று சுங்கத்துறைப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதற்கு உதாரணமாக, 19 வயது இளைஞன் ஒருவன் அவனது பெயரிலேயே போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
சில சந்தர்ப்பங்களில் நெருங்கிய உறவினர்கள் கூட கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்படலாம் என்பதால், தங்களுக்குச் சொந்தமில்லாத எந்தப் பொருளையும் கொண்டு செல்லச் சம்மதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோதப் பொருட்கள் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். எனவே, பயணிகள் தாமாகப் பொதிகளைச் சோதித்தாலும் அவற்றைக் கண்டறிவது கடினமாக இருக்கலாம்.
யாராவது இலவசமாக வெளிநாடு அனுப்பி வைப்பதாகவோ அல்லது பயணச்சீட்டு வாங்கித் தருவதாகவோ கூறினால், அதன் பின்னணியில் உள்ள காரணத்தை நன்கு சிந்திக்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்குப் பல நாடுகளில் மரண தண்டனை உள்ளிட்ட மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன என்பதை சுங்கத்துறைப் பேச்சாளர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
