யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரான பூபாலசிங்கம் ஜெயகுமாரின் உடலத்தை எதிர்வரும் சனிக்கிழமை (30) அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடலம் தொடர்பில் நீதிமன்றத்திடமிருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைய, மாநகர சபையிடம் உரிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன் குறிப்பிட்டார்.
அதற்கமைய, எதிர்வரும் சனிக்கிழமை உடலத்தை அடக்கம் செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மரண தண்டனைக் கைதி
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த நிலையில், கடந்த 25 ஆம் திகதி அதிகாலை, வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனைக் கைதியான பூபாலசிங்கம் ஜெயகுமார் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்கள் உடலத்தை ஏற்க மறுப்பு தெரிவித்த நிலையில் அரச செலவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களும் அடங்கியிருந்த நிலையில் 07 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

