விடிந்தால் பணிநீக்கம்.. ஒவ்வொரு நாளும் பீதி.. டெக் ஊழியர்கள் சந்தித்த மோசமான 6 மாதம் இதுதான்!
டெக் துறையில் 2025ஆம் ஆண்டு முழுவதும் நடந்த மொத்த பணிநீக்க எண்ணிக்கையை ஒப்பிடும் போது 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் பணிநீக்க அளவீடுகள் அதிகரித்துள்ளது என்ற முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், சாப்ட்வேர் டெவலப்மென்ட் பணிகள் மட்டும் அல்லாமல் மார்கெட்டிங், சேல்ஸ், ஹெச்ஆர் என அனைத்து பிற பிரிவுகளிலும் அதிகப்படியான ஆட்டோமேஷன் நடக்கிறது.

இதன் காரணமாக பெரிய நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் சிறிய நிறுவனங்களும் படிப்படியாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. முன்பெல்லாம் வருடத்தில் ஒருமுறை பணிநீக்கம் நடப்பதே அரிது, ஆனால் கடந்த ஒருவருடத்தில் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் நிறுவனங்கள் பணிநீக்கம் குறித்த விவாதத்தை செய்து வருகிறது.
இதனால் டெக் ஊழியர்கள் ஒவ்வொரு நாள் தூங்கும்போதும் நாளைக்கு பணி இருக்குமா என்ற அச்சத்திலேயே உள்ளனர், இதற்கு ஏற்றார் போல் பெரும்பாலான நிறுவனங்கள் பணிநீக்கம் குறித்த அறிவிப்பை விடியர்காலை 4-5 மணிக்கு அனுப்புகிறது. இல்லையெனில் மாலை 7 மணிக்கு பின்பு நிறுவன அளவில் ஆன்லைன் மீட்டிங் நடத்தி பணிநீக்கத்தை அறிவிக்கிறது.
ஏஐ தொழில்நுட்பம் உற்பத்தி திறனை பெரிய அளவில் மேம்படுத்தியிருக்கும் காரணத்தால் ஊழியர்களின் தேவையும் குறைகிறது, இதன் எதிரொலியாகவே 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் பணிநீக்கம் அதிகரித்துள்ளது.
Layoffs.fyi வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2025ஆம் ஆண்டில் முழுவதும் டெக் நிறுவனங்கள் சுமார் 1.25 லட்சம் பேரை பணிநீக்கம் செய்திருந்தது, இதுவே 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதம் அதாவது ஜூன் 30ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 1.28 லட்சம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
டெக் நிறுவனங்கள் தற்போதைய சந்தையின் போட்டியை சமாளிக்க வேறு வழியில்லாமல் அனைத்து பரிவுகளும், அனைத்து சேவைகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தை இணைத்து பணியாற்ற துவங்கியுள்ளது. இதனால் நிறுவனங்களுக்கு செலவை குறைக்கும் விதமாக பணிநீக்கத்தை விட்டால் வேறு வழியே இல்லாமல் உள்ளது.
2024 ஆண்டில் முழுவதும் 1.52 லட்சம் ஊழியர்களையும், 2023ல் 2.65 லட்சம் ஊழியர்களையும், 2022ல் 1.65 லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்த டெக் நிறுவனங்கள், 2026ஆம் ஆண்டில் தற்போதைய போக்கு தொடர்ந்தால் 3 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களை டெக் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் ஏஐ தொடர்பான பணிநீக்கத்தில் 71.33 சதவீதம் அமெரிக்காவில் நடக்கிறது. வெறும் 7.16 சதவீதம் மட்டுமே இந்தியாவில் நடக்கிறது. ஆனால் இதுவே இந்தியாவில் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது என்பது தான் தற்போதைய முக்கிய பிரச்சனையாக உள்ளது.

