ஆந்திர மாநிலம் அனகாபள்ளியை சேர்ந்தவர்கள் அப்பலநாயுடு – ஹேமா தம்பதி இவர்களுக்கு திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில் 8 மற்றும் 5 வயதில் இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர். அப்பலநாயுடு, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். குடும்பத்தைக் காப்பாற்ற, மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு விசாகப்பட்டினத்தில் வேலை பார்த்து வந்த அவர், அவ்வப்போது வீட்டிற்கு வந்து மனைவி, குழந்தைகளைப் பார்த்து செல்வார்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பண்டாரு கங்காதர் என்பவருடன் ஹேமாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் இருவருக்கும் இடையே திருமணத்திற்குப் புறம்பான உறவாக மாறியது. இவர்களின் நெருக்கம் பற்றி அறிந்த ஊர் மக்கள், அப்பலநாயுடுவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து ஊருக்கு வந்த அப்பலநாயுடு, மனைவியை கண்டித்து, நடத்தையை மாற்றிக்கொள்ளுமாறு எச்சரித்து இருக்கிறார்.
பின்னர் வேலை காரணமாக அப்பலநாயுடு மீண்டும் விசாகப்பட்டினம் சென்றுவிட்ட நிலையில், ஹேமா – கங்காதரின் தொடர்பில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் விசாகப்பட்டினத்தில் இருந்த வேலையை விட்டுவிட்டு ஊர் திரும்பிய அப்பலநாயுடு வீட்டில் தங்கி கூலி வேலைகளுக்குச் செல்ல தொடங்கினார். கணவர் வீட்டிலேயே இருந்ததால், காதலன் கங்காதரை சந்திக்க ஹேமாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால், கணவனை கொலை செய்ய கங்காதருடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டுள்ளார். கொலை திட்டத்தின்படி கணவர் அப்பலநாயுடுவிற்கு உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து சாப்பிட கொடுத்துள்ளார் ஹேமா. அப்பல நாயுடு தூங்கிய பின் கங்காதருக்கு ஹேமா அளித்த தகவலைத் தொடர்ந்து கூலிப்படை கும்பலை சேர்ந்த மூன்று பேரை கங்காதர் அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் அப்பல நாயுடுவை. கழுத்தை நெரித்தும், இரும்பு கம்பியால் அடித்தும் கொலை செய்தனர்.
அவர்கள் சென்ற பின்னர், ரத்தக்கறைகளைத் துடைத்து, அவரது ஆடைகளை மாற்றி புதிய ஆடைகளை அணிவித்து இருக்கிறார் ஹேமா காலை விடிந்துவிட, எதுவும் அறியாதது போல் வீட்டிற்கு வெளியே வந்து, அக்கம் பக்கத்தினருடன் சிரிச்சி பேசிக்கொண்டும், காபி போட்டு குடித்தும் நேரத்தைக் கடத்தி இருக்கிறார். அதே நாள் காலை, இவர்களின் வீட்டிற்கு வந்த அப்பலநாயுடுவின் அண்ணன் மகன், சித்தப்பா எங்கே என கேட்டபோது, “தூங்கிக் கொண்டிருக்கிறார், இன்னும் எழுந்திருக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.
“நான் போய் எழுப்புகிறேன்” என்று உள்ளே சென்ற அவர், அப்பலநாயுடு இறந்து கிடப்பதைக் கண்டு, ஹேமாவிடம் தெரிவித்தார். உடனே ஹேமாவும் அழுது நாடகம் போட்டுள்ளார். அப்பலநாயுடுவின் உடலைப் பார்த்த ஊர் மக்கள், உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அப்பலநாயுடுவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவர, போலீஸார் ஹேமாவை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தானும் தனது காதலன் கங்காதரும் சேர்ந்து கணவனை கூலிப்படை கும்பல் மூலம் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அதன்பின், ஹேமாவும் கங்காதரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள கூலிப்படை கும்பலை சேர்ந்த மூவரையும் பிடிக்க போலீஸார் தேடுதல் நடத்தி வருகின்றனர்.

