Last Updated:
வளிமண்டலத்தில் மிக அதிகளவு வெப்பத்தைச் சேர்க்கும் சூப்பர் எல் நினோ காரணமாக காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு, தீவிர புயல்கள் மற்றும் வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கும்
உலகளவில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் தீவிர பருவநிலை மாற்றங்கள் காரணமாக, நடப்பு ஆண்டு ஜூன் மாதம் முதல் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதி வரையிலான காலத்தில், கடுமையான வெப்பம் தொடர்பான காரணங்களால் உலகளவில் 4,51,000 கூடுதல் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று ‘கிளைமேட் இம்பேக்ட் லேப்’ ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 15,800 பேரின் உயிர்களுக்கு ஆபத்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது, உலகளவில் 24,378 பகுதிகளில் நிலவும் வெப்பநிலை மற்றும் உயிரிழப்புகளுக்கு இடையிலான தொடர்பை ஆய்வு செய்து தயாரிக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஆண்டுகளை விட, மிகக் கடுமையான வெப்பம் நிலவும் நாட்களின் எண்ணிக்கை 44 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இந்தக் கடுமையான வெப்ப அலைகளால் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் வளர்ந்து வரும் நாடுகள் அதிக பாதிப்புகளைச் சந்திக்கும் எனக் கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர், அதன் இயல்பான வெப்பநிலையை விட 0.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் அதிகரிக்கும் இயற்கை நிகழ்வு ‘எல் நினோ’ எனப்படுகிறது. இந்த வெப்பநிலை உயர்வு பல மாதங்களுக்கு தொடர்ந்து 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் இருக்கும்போது, அதை அறிவியலாளர்கள் ‘சூப்பர் எல் நினோ’ என்று அழைக்கின்றனர்.
வளிமண்டலத்தில் மிக அதிகளவு வெப்பத்தைச் சேர்க்கும் சூப்பர் எல் நினோ காரணமாக காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு, தீவிர புயல்கள் மற்றும் வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கும். இது விவசாயத்தைப் பாதித்து உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும்.
இருப்பினும், இந்தியாவில் வழக்கமாகக் கோடைகாலத்திலேயே கடுமையான வெப்ப அலைகள் வீசும் என்பதால், 2027 பிப்ரவரிக்குள் 15,000க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படும் என்ற கணிப்பு முற்றிலும் சரியாக இருக்க வாய்ப்பில்லை எனச் சில ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

