கோலாலம்பூர்:
சமூக வலைத்தளப் பதிவ ஒன்றின் மூலம் நபர் ஒருவரை வாளால் காயப்படுத்துவதாக மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் 46 வயதுடைய நபர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று கெடா, லங்காரில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், அவருக்கு இன்று முதல் 3 நாட்கள் நீதிமன்றத் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பெர்லிஸ் மாநில இடைக்காலப் போலீஸ் தலைவர் சிரேஷ்ட உதவி ஆணையர் ஜைஹைருல் இத்ருஸ் தெரிவித்தார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது, இணையத்தில் வைரலான பதிவில் காட்டப்பட்ட அதே வாள் அவரது வாகனத்திலிருந்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
தனிப்பட்ட பகை காரணமாகவே இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் நம்பப்படுகிறது. ‘சயா அனாக் பெர்லிஸ்’ (Saya Anak Perlis) என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட மிரட்டல் குறித்து நேற்று போலிசாருக்குப் புகார் கிடைத்தது என்றும், இச்சம்பவம் 1958-ஆம் ஆண்டு அரிக்கும் மற்றும் வெடிக்கும் பொருட்கள் மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் சட்டத்தின் பிரிவு 6(1), குற்றவியல் சட்டத்தின் பிரிவு 507 (Section 507 of Penal Code – ரகசிய மிரட்டல்), 1998-ஆம் ஆண்டு தொடர்பாடல் மற்றும் பல்லூடகம் சட்டத்தின் பிரிவு 233 (Section 233 of CMA 1998)
ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் சொன்னார்.



