கோலாலம்பூர்:
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள நான்கு வெவ்வேறு வாடகை வீடுகளில் முறையான அனுமதியின்றி அழகியல் மற்றும் அழகு சிகிச்சை சேவைகளை வழங்கி வந்த 19 முதல் 44 வயதுக்குட்பட்ட ஒரு ஆண் மற்றும் 6 பெண்கள் உட்பட 7 இந்தோனேசியப் பிரஜைகளை மலேசியக் குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகார்கள் மற்றும் உளவுத்துறைத் தகவல்களின் அடிப்படையில், நேற்று பிற்பகல் 12.15 மணியளவில் இச்சோதனை நடவடிக்கை முடுக்கப்பட்டது.
“ஷா ஆலாமில் உள்ள ஜாலான் யுரேனஸ், பண்டான் பெர்டானா மற்றும் கெப்போங்கில் உள்ள இரு இடங்கள் உட்பட 4 வெவ்வேறு இடங்களில் உள்ள வாடகை வீடுகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வெளிநாட்டவர்கள் உள்ளூர்வாசிகளுக்கும் குறிப்பாக இந்தோனேசியர்களுக்கும் இத்தகைய போலி அழகியல் சேவைகளை வழங்குவதைத் தடுப்பதே இந்நடவடிக்கையின் முதன்மை நோக்கமாகும்” என்று மலேசியக் குடிநுழைவுத் துறை ஓர் அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது.
இவர்கள் ‘டிக் டாக்’ (TikTok) மற்றும் ‘இன்ஸ்டாகிராம்’ (Instagram) போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தங்களது சேவைகளை விளம்பரப்படுத்தி வந்துள்ளனர். வாடிக்கையாளர்கள் இணையம் வழியே முன்பதிவு செய்த பின்னரே இந்த வாடகை வீடுகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக இயங்கி வந்த இந்தச் சட்டவிரோதத் தொழில் மூலம், மாதம் RM50,000 வரை வருமானம் ஈட்டப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. ஒருமுறை சிகிச்சை அளிக்க RM400 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைக் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் தங்களது சொந்த நாட்டில் இச்சிகிச்சை முறைகளைக் கற்றுக்கொண்ட பின்னரே மலேசியாவிற்கு வந்து பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது குடிவரவுச் சட்டம் 1959/63-இன் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2006-ஆம் ஆண்டு தனியார்துறை சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் விதிகளின் கீழ் மேலதிக நடவடிக்கைக்காக இவர்கள் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
சுகாதார அமைச்சு, தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை (DOSH) மற்றும் உள்ளாட்சி மன்றங்களின் அமலாக்க அதிகாரிகளுடன் இணைந்து இந்தச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
The post வாடகை வீடுகளில் சட்டவிரோத அழகு சிகிச்சை நிலையம்: கிள்ளானில் 7 இந்தோனேசியர்கள் கைது! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

