கோலாலம்பூர்:
தீபகற்ப மலேசியாவில் (Peninsular Malaysia) டீசலின் சில்லறை விற்பனை விலை நாளை (ஜூன் 18) முதல் லிட்டருக்கு 30 சென் (காசுகள்) குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு (MOF) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, தற்போது லிட்டருக்கு RM4.67 ஆக இருக்கும் டீசலின் விலை, நள்ளிரவு முதல் RM4.37 ஆகக் குறையும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததைத் தொடர்ந்து, தானியங்கி விலை நிர்ணய முறையின் (APM) கீழ் இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், கிழக்கு மலேசியாவில் (சபா, சரவாக் மற்றும் லபுவான்) டீசலின் மானிய விலையான RM2.15 எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து நீடிக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.
மேலும் RON97 பெட்ரோல்: மாற்றம் ஏதுமின்றி லிட்டருக்கு RM4.35 ஆக நீடிக்கும் என்றும், RON95 (மானியம் நீக்கப்பட்ட சந்தை விலை) லிட்டருக்கு RM3.72 ஆக விற்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மலேசிய குடிமக்களுக்கான இலக்கு வைக்கப்பட்ட பெட்ரோல் மானியத் திட்டமான ‘புடி95’ (BUDI95) திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற உள்நாட்டு வாகன ஓட்டிகளுக்கு, RON95 பெட்ரோல் தொடர்ந்து லிட்டருக்கு RM1.99 என்ற பழைய மானிய விலையிலேயே வழங்கப்படும் என நிதி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் இன்னும் சில நிச்சயமற்ற சூழல்கள் நிலவி வருவதால், பொதுமக்கள் தங்களது பயணங்களை முறையாகத் திட்டமிட்டு, எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நிதி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.




