வல்லவனுக்கு வல்லவன்.. இந்த நாட்டின் நாணயத்திற்கு முன்பு அமெரிக்க டாலர் எல்லாம் ஓன்னுமே இல்ல..!!
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் 2026ஆம் ஆண்டில் மட்டும் 7 சதவீதம் மேல் சரிந்து 90 ரூபாயில் இருந்து 97 ரூபாய் வரையில் சரிந்திருக்கும் நிலையில், டாலர் தான் உலகிலேயே மிகவும் வலிமையான அல்லது மதிப்பு மிக்க நாணயம் எனப் பலரும் கேட்டு இருப்போம்.
ஆனால் உண்மையில் அமெரிக்க டாலர் விட வில்லாதி வில்லனும், சூராதி சூரணம் உலக நாடுகளில் இருக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் ரூபாய் மதிப்புக்கு எதிராகக் கணக்கிடும் போது டாலர் 10வது இடத்தில் தான் இருக்கிறது.

இந்திய ரூபாய்க்கு நிகரான ஒரு யூனிட் நாணயத்தின் மதிப்பின் அடிப்படையில் பார்க்கும் போது, உலகிலேயே அதிக மதிப்புள்ள நாணயமாக விளங்குகிறது குவைத் தினார். முதல் இடத்தில் குவைத் தினார், 10வது இடத்தில் அமெரிக்க டாலர்.. அப்போது நடுவில் இருப்பது எந்தெந்த நாடுகள்..?
குவைத் தினார் (KWD): ஒரு குவைத் தினாரின் மதிப்பு சுமார் 3.23 அமெரிக்க டாலர். இதை இந்திய ரூபாயில் மாற்றினால் சுமார் 311 ரூபாயாகும். அதாவது குவைத் நாட்டில் 100 தினார் சம்பாதித்தால் 31,100 ரூபாய்க்கு இணையாகச் சம்பளமாகும்.
பஹ்ரைன் தினார் (BHD): ஒரு பஹ்ரைன் தினாரின் மதிப்பு சுமார் 2.66 அமெரிக்க டாலர். இதுவே இந்திய ரூபாயில் சுமார் ரூ.254-255 ஆகும்.
ஓமன் ரியால் (OMR): ஒரு ஓமன் ரியாலின் மதிப்பு சுமார் 2.60 அமெரிக்க டாலர். இதுவே இந்திய ரூபாயில் சுமார் ரூ.249 ஆகும்.
அடுத்தாக 1 ஜோர்டான் தினார் (JOD) இந்திய ரூபாயில் 135 ரூபாய், பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங் (GBP) இந்திய ரூபாயில் 127 ரூபாய், ஜிப்ரால்டர் பவுண்ட் (GIP) இந்திய ரூபாயில் 127 ரூபாய், சுவிஸ் பிராங்க் (CHF) இந்திய ரூபாயில் 115.43 ரூபாய், கேமன் தீவுகள் டாலர் (KYD) இந்திய ரூபாயில் 115 ரூபாய், யூரோ (EUR) இந்திய ரூபாயில் 109.03 ரூபாய், 10வது இடத்தில் அமெரிக்க டாலர் இந்திய ரூபாயில் 96.78 ரூபாய்.
அமெரிக்க டாலரைக் காட்டிலும் குவைத் தினார் அதிக மதிப்புடையது என்பதால், அமெரிக்காவைக் காட்டிலும், குவைத் பலமிக்க நாடு என்பது பொருள் இல்லை.
ஒரு நாணயத்தின் மதிப்பும், ஆதிக்கமும் அதன் மாற்று விகிதத்தின் அடிப்படையில் மட்டும் இல்லை, அந்த நாணயத்தின் பயன்பாடு, சர்வதேச வர்த்தகத்தில் அதன் முக்கியத்துவம், அதன் பயன்பாடு, உலக நாடுகள் எந்தளவுக்கு ஒரு நாட்டின் நாணயத்தைச் சேமித்து வைத்துப் பயன்படுத்துகிறார் எனப் பல காரணிகள் அடிப்படையில் தான் அதன் வலிமை நிர்ணயம் செய்யப்படுகிறது.
குவைத் அரசின் 90 சதவீத வருவாய் எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் இருந்து மட்டுமே வருகிறது, இதேபோல் இந்நாட்டின் எரிபொருளுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் குவைத்திடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் குவைத் தினாரை மாற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால் இதன் மதிப்பு எப்போதும் உச்சத்தில் இருக்கிறது.
இதேபோல் குவைத் தினார் பணப்புழக்க சந்தையில் மிகவும் சிறிய பங்கீட்டைக் கொண்டு இருக்கும் காரணத்தால் சர்வதேசச் சந்தையின் தாக்கம் இதற்கு மிகவும் குறைவு என்பதாலும், பல வருடங்களாகக் குவைத் தினார் அதிக மதிப்புடனே உள்ளது.

