கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ளது கல்லாடி. இப்பகுதியில், இரட்டைச் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சுரங்கப்பாதை திட்டப் பகுதியில் பெருமளவு மண் தோண்டி எடுக்கப்பட்டு குவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் அப்பகுதியில் அதீத கனமழை பெய்ததால், பெரும் மண் குவியல் திடீரென சரிந்து விழுந்தது. இதில், தொழிலாளர்களின் தற்காலிக குடியிருப்புகள், வீடுகள், தேவாலயம் உள்ளிட்டவற்றை சேறும் சகதியுமான மண் குவியல் மூடியது.
மலையின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்த போது, வேகமாக ஓடுங்கள்… என ஒருவர் அலறியபடியே ஓடி வர, அதை பார்த்த மக்கள், உயிரை கையில் பிடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். சரிந்து வந்த பிரம்மாண்ட மண் குவியல், பாலத்தின் மீது நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய எரிபொருள் டேங்கர் லாரியை திரைப்பட காட்சிகளில் வருவதை போல அடித்துச் சென்றது. சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் மீது லாரி பயங்கர வேகத்தில் மோதிய நிலையில் அப்பகுதியில் இருந்த சிலர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
மேலும், சுரங்கப்பாதை தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்தை, இந்த மண் சரிவு, அப்படியே தள்ளிச் சென்று அருகில் இருந்த ஆற்றுக்குள் வீசிச் சென்றது. விபத்து நடந்த கல்லாடியில் மீனாட்சி பாலம் அருகே தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றி, மாயமானவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
இரவு நேரத்தில் மழை பெய்த நிலையில், மழைக்கு மத்தியிலும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. விபத்து நடைபெற்ற இடத்தில் இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கக்கூடும் என கருதப்படுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. வயநாட்டில் பல்வேறு காலகட்டங்களில் அவ்வப்போது நிலச்சரிவு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
குறிப்பாக, 2024 ஆம் ஆண்டு நிகழ்ந்த நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டவர்கள் பலியான நிலையில் பலர் படுகாயமடைந்தனர். மேலும் பலரின் கதி என்னவானது என்றே தெரியாத நிலையில் நூற்றுக்கணக்கான வீடுகள், தேயிலைத் தோட்டங்கள், பள்ளிகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. அந்த கொடூர விபத்தின் சுவடுகளிலிருந்தே மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில்தான் இப்படி ஒரு விபத்து தற்போது நிகழ்ந்துள்ளது.
இந்த நிலையில், தற்போது கல்லாடி பகுதியில் நிலைமையை ஆய்வு செய்த கேரள முதலமைச்சர் வி. டி. சதீசன், தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மீட்புப் பணிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளதாக கவலை தெரிவித்தார். தோண்டி எடுத்து வைக்கப்பட்டிருந்த மண்ணை, உரிய வானிலை எச்சரிக்கை விடுத்தும், முறையாக அகற்றாத ஒப்பந்ததாரரின் அலட்சியமே இந்த விபத்திற்குக் காரணம் எனவும் முதலமைச்சர் வி.டி.சதீசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுரங்கப்பாதையில் இருந்து தோண்டப்பட்ட மண்ணை அங்கேயே குவித்து வைத்ததே இந்த விபத்திற்குக் காரணம் எனவும் இது மனிதர்களால் நடந்த நிலச்சரிவு எனவும் கேரள அமைச்சர்கள் ரமேஷ் சென்னிதலா, டி. சித்திக் ஆகியோர் சாடியுள்ளனர். இதனிடையே கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், வயநாடு மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

