India
oi-Rajkumar R
டெல்லி: கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் இந்தியா முழுவதும் 20% எத்தனால் கலந்த இ20 பெட்ரோல் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இ20 பெட்ரோல் வாகனங்கள் பழுதாவது, மைலேஜ் குறைவது போன்ற புகார்கள் பெரும்பாலான வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், 50 சதவீதத்துக்கு மேல் இ20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் பெரும்பாலும் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் தான் இயங்குகின்றன. இந்தியாவில் பெட்ரோல் டீசல் உற்பத்தி பெரிய அளவில் இல்லாத நிலையில் வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதற்காக நிதி டாலர் மூலம் தான் செலவிடப்படுகிறது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு நிலைத்தன்மை இல்லாமல் இருக்கிறது. இதை அடுத்து இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து, எரிசக்தி தன்னிறைவு அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.

இ20 பெட்ரோல்
தற்போது 20% எத்தனால் கலந்த e20 பெட்ரோல் விற்பனை நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த திட்டம் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை என ஒரு சாரார் கூறுகின்றனர். இதை அடுத்து இந்த திட்டம் குறித்து மக்களின் மனநிலையை அறிய சி-ஓட்டர் அமைப்பு நாடு முழுவதும் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி இருக்கிறது.
சி-வோட்டர் கருத்துக்கணிப்பு
ஜூலை 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற்ற இந்த ஆய்வில் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர். அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி இ-20 பெட்ரோல் திட்டத்தை 52 சதவீதம் பேர் எதிர்த்திருக்கின்றனர். வெறும் 22 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துனர். மேலும் 25.9% பேர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என கூறியிருக்கின்றனர்.
மைலேஜ்
இ20 பெட்ரோல் பொருத்தவரை வாகனங்களின் செயல் திறன் தொடர்பாகவே மக்கள் அதிகம் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். 52.8% பேர் வாகனங்கள் பழுதடைய கூடும் எனவும், 54.2% பேர் மைலேஜ் குறைய கூடும் என கவலை தெரிவித்திருக்கின்றனர். மொத்தத்தில் 55% இந்த காரணங்களால் இ20 பெட்ரோலை பயன்படுத்த விரும்பவில்லை எனக் கூறியிருக்கின்றனர். மேலும் எத்தனால் கலந்த பெட்ரோல் மற்றும் சாதாரண பெட்ரோல் ஆகிய இரண்டையும் பொதுமக்கள் விருப்பப்படி தேர்வு செய்யும் வகையில் தனித்தனியாக விற்பனை செய்ய வேண்டும் என 76 சதவீதம் பேர் வலியுறுத்தி இருக்கின்றனர்.
பெட்ரோல் விலை
அதே நேரத்தில் விலை தொடர்பாகவும் மக்கள் சில கோரிக்கைகளை விடுத்திருக்கின்றனர். சாதாரண பெட்ரோலை விட இ20 பெட்ரோலின் விலை குறைவாக இருக்க வேண்டும் என பெரும்பாலான ஒரு கருத்து தெரிவித்திருக்கின்றனர். புதிய எரிபொருளை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க சலுகை விலையில் அதனை விற்பனை செய்ய வேண்டியது அவசியம் என பலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
பழைய வாகனங்கள்
அதே நேரத்தில் இ20 பெட்ரோல் வசதி கொண்ட வாகனங்கள் தற்போது தான் வந்திருக்கும் நிலையில் பழைய வாகனங்களை பயன்படுத்துபவர்கள் இந்த திட்டம் குறித்த கவலை அதிகரித்திருக்கிறது. பழைய வாகன உரிமையாளர்களுக்கு அநீதி என்று 56.3% பேர் கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். இதில் 49.2% பேர் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் இறக்குமதி
மறுபுறம், இ20 பெட்ரோலால் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும், எரிசக்தி பாதுகாப்பு வலுப்பெறும் என்ற நம்பிக்கையையும் சிலர் வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, 43 சதவீதம் பாஜக ஆதரவாளர்கள், எத்தனால் கலந்த பெட்ரோல் இந்தியாவின் எரிபொருள் இறக்குமதி செலவை குறைப்பதோடு, நீண்டகால எரிசக்தி பாதுகாப்பிற்கும் உதவும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.




