Last Updated:
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்து 6% ஆக அறிவித்துள்ளது.
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பணவியல் கொள்கை மதிப்பாய்வு கூட்டத்தையடுத்து, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்ததாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 0.25% குறைத்து ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. உலக நாடுகளுக்கு அமெரிக்கா விதித்து வரும் வரியால், உலக நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், “இந்த நிதியாண்டு கவலையான சூழலுடன் தொடங்குகிறது. சில வர்த்தக சிக்கல்கள் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கின்றன. இவ்வாறான நிச்சயமற்ற சூழ்நிலைகளில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்” என கூறியுள்ளார்.
ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளதால், வங்கிகளிடம் பொதுமக்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரெப்போ வட்டி விகிதம் குறைவால் பொதுமக்களிடம் அதிகம் பணப்புழக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: தொடர்ந்து குறைந்த தங்கம் விலை இன்று உயர்ந்தது..! இன்றைய விலை நிலவரம் என்ன?
கொரோனா காலத்தில் 4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மாற்றியமைக்காமல் வைத்திருந்தது. இதையடுத்து படிப்படியாக உயர்ந்து வந்த ரெப்போ வட்டி விகிதம், கடந்த 2023ஆம் ஆண்டு 6.50% ஆக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ரெப்போ வட்டி விகிதம் கடந்த பிப்ரவரி மாதம் 0.25% குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 0.25% குறைக்கப்பட்டு 6% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
April 09, 2025 10:38 AM IST


