Last Updated:
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பீகார் மாநிலங்களைத் தொடர்ந்து இப்போது மேற்கு வங்கத்திலும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது
மேற்கு வங்கத்தில் வன்முறை கலாசாரம் முடிவுக்கு வர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு 80 இடங்கள் கிடைத்தன.
காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்கத் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி கட்சி தலைமையகத்தில் பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் நிலவி வரும் அரசியல் சூழலில் மாற்றம் தேவை. இன்றைக்கு பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்தச் சூழலில் நாம் மாற்றத்தைப் பற்றியும், மாநிலத்தின் வளர்ச்சி பற்றியும் மட்டுமே பேச வேண்டும். மேற்கு வங்கத்தில் இதுவரையில் வன்முறை அதிகமாக நிலவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
மேற்கு வங்க மக்கள் பயத்திலிருந்து வெளியேறி பாஜகவுக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பீகார் மாநிலங்களைத் தொடர்ந்து இப்போது மேற்கு வங்கத்திலும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.
கங்கோத்ரி முதல் கங்கா சாகர் வரை கங்கை நதிக்கரை மாநிலங்கள் அனைத்திலும் தாமரை மலர்ந்துள்ளது. அத்துடன் கேரளா, தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி மாநிலங்களிலும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசி உள்ளார்.


