International
oi-Nantha Kumar R
டாக்கா: மோதலுக்கு நடுவே வங்கதேசத்தில் அரிசி விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. அதேபோல் கோதுமையின் விலையும் 17 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேசத்துக்கு கோதுமை கொடுத்து உதவ இந்தியா முன்வந்துள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்துக்கும், நம் நாட்டிற்கும் இடையேயான உறவு இன்னும் சீராகவில்லை. வங்கதேசத்தில் நடந்த வன்முறை மற்றும் ஷேக் ஹசீனா வெளியேற்றம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் விழுந்தது. இந்த விரிசல் இன்னும் சரியாகவில்லை.
இந்நிலையில் தான் தற்போது வங்கதேசம் நம் நாட்டிடம் இருந்து கோதுமை வாங்க தயாராகி உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவின் புளும்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
”கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முதலாக வங்கதேசம், இந்தியாவிடம் இருந்து கோதுமை வாங்க உள்ளது. வங்கதேச வணிகர்கள் 2 லட்சம் டன்னுக்கும் அதிகமான கோதுமையை இந்தியாவிடம் இருந்து முன்பதிவு செய்துள்ளனர். ஒரு டன் கோதுமை ரூ.29,320 முதல் 3,236 வரையிலான விலையில் வாங்க வங்கதேச வணிகர்கள் முன்வந்துள்ளனர். இந்த கோதுமைகள் ரயிலில் வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது” என கூறப்பட்டுள்ளது.
வங்கதேசத்தை எடுத்து கொண்டால் அரிசி தான் பிரதான உணவு தானியமாக உள்ளது. அரிசிக்கு அடுத்ததாக 2வது உணவு தானியமாக கோதுமை உள்ளது. வங்கதேசம் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் டன் கோதுமையை உற்பத்தி செய்கிறது. ஆனால் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய கூடுதலாக 70 லட்சம் டன் கோதுமையை வங்கதேசம் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
வரலாற்று ரீதியாக பார்த்தால் இந்தியா தான் வங்கதேசத்துக்கு கோதுமை ஏற்றுமதி செய்து வந்தது. அந்த நாடு இறக்குமதி செய்யும் கோதுமையில் 50 சதவீதம் வரை இந்தியாவில் இருந்து தான் சென்றது. 2020-21ம் ஆண்டை எடுத்து கொண்டால் இந்தியா மொத்தம் 11,57,399.35 டன் கோதுமையை வங்கதேசத்துக்கு ஏற்றுமதி செய்தது. அதன்பிறகு 2022ம் ஆண்டில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் வங்கதேசத்துக்கான கோதுமை ஏற்றுமதி நிறுத்தப்பட்டது.
அதிகமான வெயில் காரணமாக 2021-22ம் ஆண்டில் நம் நாட்டில் கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டது. அந்த ஆண்டு மொத்தம் 106.84 மில்லியன் டன் என்ற அளவுக்கு மட்டுமே கோதுமை உற்பத்தியானது. இது முந்தைய ஆண்டின் உற்பத்தியான 109.59 மில்லியன் டன்னை ஒப்பிடும்போது 2.5 சதவீதம் வரை குறைவாகும். இந்த உற்பத்தி குறைவு மட்டுமின்றி, அந்த ஆண்டில் தான் ரஷ்யா – உக்ரைன் போர் வெடித்தது. உலகளவில் கோதுமை ஏற்றுமதியை அதிகம் மேற்கொள்ளும் ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட இரண்டு நாடுகளும் போரில் சிக்கியதால் உலகளவில் கோதுமை சப்ளை பாதிக்கப்பட்டது. இதனால் நம் நாடும் உள்நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு கோதுமை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது.
இதனால் வங்கதேசத்துக்கு கோதுமை கிடைக்கவில்லை. அங்கு விலை 17 சதவீதம் வரை அதிகரித்தது. வேறு வழியின்றி அர்ஜென்டினா, கனடா, ரஷ்யா, உக்ரைனில் இருந்து கருங்கடல் வழியாக கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது.
போர் பதற்றம், நீண்ட தூரம் இருந்து கோதுமை இறக்குமதி செய்வதால் ஆகும் செலவு உள்ளிட்டவற்றால் வங்கதேசத்தில் கோதுமை விலை குறையவே இல்லை. அதுமட்டுமின்றி திடீரென்று அரிசி விலையும் உச்சம் தொட தொடங்கி உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அரிசிக்கு பதில் கோதுமையை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதனால் கோதுமையின் தேவை வங்கதேசத்தில் அதிகரித்துள்ளது. இது வங்கதேசத்தில் புதிய பிரச்சனையாக மாறியது.
இதற்கிடையே தான் நம் நாட்டில் 2025-26ம் ஆண்டில் கோதுமை உற்பத்தி 120.65 மில்லியன் டன்னாக அதிகரித்தது. இது கோதுமை உற்பத்தியில் புதிய சாதனையாகும். இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் நம் நாடு கோதுமைக்கு விதித்த 4 ஆண்டு கட்டுப்பாட்டை நீக்கியது. இதையடுத்து தான் மோதலுக்கு நடுவேயும் வங்கதேசம் நம் நாட்டிடம் கோதுமை இறக்குமதி செய்ய தயாராகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

