Last Updated:
மூளையைச் சென்றடையும் வகையில் பல டிரில்லியன் வைரஸ்கள் சிறுமியின் தண்டுவடப் பகுதி வழியாகச் செலுத்தப்பட்டன.
சீனாவில் அரிதான மரபணு நோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமிக்குச் செய்யப்பட்ட பரிசோதனை முறை ‘ஜீன் எடிட்டிங்’ (Gene-Editing) சிகிச்சைக்குப் பிறகு அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்ட அறிவியல் ஆய்வறிக்கையில் மறைக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்நாட்டுப் பல்கலைக்கழகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
‘மேய்’ (Mei) என்ற புனைப் பெயரிடப்பட்ட அந்த 6 வயது சிறுமி, மூளை வளர்ச்சி தொடர்பான அரிதான மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அச்சிறுமியின் மூளையிலுள்ள பிறழ்ந்த மரபணுவை மாற்றி, அவருக்குத் தேவையான புரதத்தைச் சுரக்க வைப்பதற்காகத் தலைமை நரம்பியல் நிபுணர் ஜிலாங் சியு தலைமையில் புதிய ஜீன் எடிட்டிங் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்காகச் சிறுமியின் பெற்றோரிடம் இருந்து 800,000 டாலருக்கும் அதிகமான தொகையை ரூ. 6.7 கோடிக்கும் மேல் பெற்றுக்கொண்டு, மூளையைச் சென்றடையும் வகையில் பல டிரில்லியன் வைரஸ்கள் சிறுமியின் தண்டுவடப் பகுதி வழியாகச் செலுத்தப்பட்டன. ஆனால், சிகிச்சை அளிக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே அச்சிறுமி உயிரிழந்தார்.
சிறுமி உயிரிழந்த போதிலும், நரம்பியல் நிபுணர் ஜிலாங் சியு விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்த தனது ஆராய்ச்சிக் கட்டுரையை புகழ்பெற்ற ‘நேச்சர்’ (Nature) இதழில் வெளியிட்டார். ஆனால், அதில் சிறுமி மேயின் உயிரிழப்பு குறித்து எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை.மேலும், சிகிச்சையின் அபாயங்கள் குறித்துச் சிறுமியின் பெற்றோருக்குச் சரியாகத் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஷாங்காய் ஜியாவோ டாங் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி சிறப்புக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அறிவியல் ஆராய்ச்சி நெறிமுறைகளை மீறும் செயல்களுக்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
2018-ல் சீனாவில் ஹீ ஜியான்குய் என்ற ஆய்வாளர் இரகசியமாக ஜீன் எடிட்டிங் குழந்தைகள் உருவாக்கம் செய்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போதைய சம்பவம் சீனாவின் பயோடெக் துறையின் நம்பகத்தன்மைக்கு மேலும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ரூ.6.7 கோடி செலவில் ‘ஜீன் எடிட்டிங்’ சிகிச்சை: 6 வயது சிறுமி பலி… சீனாவில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்

