ரூ.2,000க்கு மேல் UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: Gpay,Paytm பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
யுபிஐ பேமெண்ட் நடைமுறை தான் இந்தியா எங்கும் காணப்படுகிறது. பெரும்பாலான இந்தியர்கள் இப்போதெல்லாம் பர்ஸையே வெளியே கொண்டு செல்வது கிடையாது. எங்கு பணம் செலுத்த வேண்டும் என்றாலும் கியூஆர் கோடு அல்லது நம்பர் கொண்டு ஜிபே, போன் பே, பேடிஎம் போன்றவற்றில் பணம் அனுப்புகிறோம்.
10 ரூபாயில் தொடங்கி பல ஆயிரங்கள் வரை யுபிஐ செயலிகள் வாயிலாக எளிதாக அனுப்பவும் பெறவும் முடிகிறது. இந்நிலையில் தான் 2000 ரூபாய்க்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி பெரிய வர்த்தக நிறுவனங்கள் பெறும் 2,000 ரூபாக்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு Merchant Discount Rate – MDR எனப்படும் கட்டணத்தை மீண்டும் வசூலிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் இதை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது 1.5 கோடி ரூபாக்கு மேல் வருவாய் ஈட்டும் வணிகர்களே இந்த வரி வரம்பிற்குள் கொண்டு வரப்படுவார்கள். ஆண்டு வருவாய் 1.5 கோடி ரூபாய்க்கும் குறைவாக உள்ள சிறு வணிகர்கள், பரிவர்த்தனை தொகை எவ்வளவு இருந்தாலும், இந்த கட்டணத்திலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுவார்கள்.
ஒருவேளை இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், பரிவர்த்தனை மதிப்பில் அதிகபட்சமாக 0.5 சதவீதம் வரை MDR கட்டணமாக வசூலிக்கப்படும். இது தொடர்பான இறுதி முடிவு அடுத்த ஒரு மாதத்திற்குள் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக UPI மற்றும் ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான MDR கட்டணத்தை ஜனவரி 2020 முதல் அரசு நீக்கியிருந்தது.
இருப்பினும், தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை உள்கட்டமைப்பை பராமரிப்பதற்கான செலவுகள் அதிகரித்து வருகின்றன. வங்கி மற்றும் பண பரிவர்த்தனை சேவை நிறுவனங்களின் நிதி சுமையை குறைக்கவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்த கட்டணம் மீண்டும் தேவைப்படுவதாக அரசு கருதுகிறதாம்.
தற்போதைய புள்ளிவிவரப்படி, 2,000 ரூபாய்க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் அளவு மொத்த பரிவர்த்தனைகளில் 4 சதவீதத்திற்கும் குறைவானவை மட்டுமே. எனவே இந்த மாற்றம் மிக சிறிய அளவிலான யுபிஐ பரிவர்த்தனைகளை மட்டுமே பாதிக்கும் என சொல்லப்படுகிறது.
சுமார் 86 சதவீத யுபிஐ பரிவர்த்தனைகள் 500 ரூபாய்க்கும் குறைவானவை ஆகும். மீதமுள்ள 10 சதவீத பரிவர்த்தனைகள் 501 முதல் 2,000 ரூபாய் வரையிலான வரம்பில் உள்ளன. எனவே, சாதாரண மக்களுக்கு இந்த மாற்றத்தால் எந்த பாதிப்பும் இருக்காது. ஜிபே, போன்பே மூலம் பணம் செலுத்தும் மக்களிடம் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது. வணிகர்களிடம் இருந்து தான் இந்த கட்டணம் வசூல் செய்யப்படும். அதுவும் பெரு வணிகர்கள் மட்டுமே இந்த கட்டணத்தை செலுத்த போகிறார்கள்.
தற்போது MDR கட்டணம் இல்லாததால், அரசு யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.15 சதவீத ஊக்கத்தொகையை வழங்கி வருகிறது. ஆனால், இது தொழில்துறையின் செயல்பாட்டு செலவுகளை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என இந்திய பண பரிவர்த்தனை கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது.

