Last Updated:
ரூ.2,000க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதித்தது. இதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரூ. 2,000க்கு மேலான யுபிஐ வணிக பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இது வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்த அனுமதிக்கு வணிகர்கள் தரப்பில் இருந்தும் வாடிக்கையாளர்கள் தரப்பில் இருந்தும் பல்வேறு கருத்துகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த அனுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு விசாரணை எடுத்து, விசாரணை நடத்தியது. விசாரணையில் முதற்கட்டமாக கட்டணம் வசூலிப்பதற்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கொள்கை ரீதியான முடிவின் சட்டப்பூர்வத்தன்மை என்ன என்பதைத் தெரிவிக்குமாறு, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி உள்ளிட்டவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி அரசாங்கம் அல்லது என்.பி.சி.ஐ விதிக்கும் இந்தக் கட்டணத்தின் சட்டப்பூர்வத் தன்மை என்ன?
இது வரியா, சேவைக்கான கட்டணமா? நிர்வாக அமைப்புகள் சட்டப்பூர்வ வழிகாட்டுதல்கள் இல்லாமல் இத்தகைய கட்டணங்களை எவ்வாறு நிர்ணயிக்க முடியும்? எனும் கேள்விகளையும் உச்சநீதிமன்றம் எழுப்பியது. தொடர்ந்து இந்த விவகாரத்தில் மத்திய அரசு அடுத்த நான்கு வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


