ரூ.1,60,000 சம்பளத்தில் அரசு வேலை! இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்ட அறிவிப்பு!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், ஆகஸ்ட் 14-ஆம் தேதி அன்று பல்வேறு எக்ஸிகியூடிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. கணினி வழி தேர்வு வைத்து பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். கிராஜுவேட் இன்ஜினியர், மார்க்கெட்டிங் ஆஃபீஸர், டிப்ளமோ இன்ஜினியர் போன்ற பல்வேறு பதவிகள் இதில் அடங்கும். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதி வேண்டும்?, எவ்வளவு சம்பளம்?, டிகிரி தேவையா? என்ற விபரங்களைப் பார்ப்போம்.
அறிவிப்பு வெளியான ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் இந்தக் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 3 வரையில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் தேதி செப்டம்பர் 15. இப்போதே கணினி வழி தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 24-ஆம் தேதி அன்று தேர்வு நடைபெறுகிறது. ஆனால் இது தற்காலிக தேதி தான். இதில் மாற்றம் செய்யப்படும் வாய்ப்பும் இருக்கிறது. சரியான தேதியை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்ந்து கவனியுங்கள்.
வயதுவரம்பு: கிராஜுவேட் இன்ஜினியர் மற்றும் டிப்ளமோ இன்ஜினியர் பதவிக்கான வயதுவரம்பு 26. மார்க்கெட்டிங் ஆஃபிஸர் பதவிக்கான வயது வரம்பு 28. லா ஆஃபிஸர் மற்றும் அசிஸ்டன்ட் குவாலிட்டி கண்ட்ரோல் ஆஃபிஸர் பதவிக்கான அதிகபட்ச வயது வரம்பு 30. இந்த வயது வரம்பில் சில தளர்வுகள் அந்தந்த பிரிவினரை பொறுத்து இருக்கும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் குறிப்பிட்டுள்ளது.
பணி அனுபவம்: லா ஆஃபிஸர் மற்றும் அசிஸ்டன்ட் குவாலிட்டி ஆஃபிஸர் பதவிகளுக்கு பணி அனுபவம் கட்டாயமாகும். இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 2026-ஆம் ஆண்டின் ஜூன் 30-ம் தேதிக்குள் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவத்தை கொண்டிருக்க வேண்டும். நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயங்கள், சட்ட நிறுவனங்கள், தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய மாநில அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் உங்களுக்கு பணி அனுபவம் இருக்கலாம்.
அசிஸ்டன்ட் குவாலிட்டி கண்ட்ரோல் ஆஃபிஸர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பெட்ரோலியம், பெட்ரோகமிக்கல் அல்லது NABL அங்கீகாரம் பெற்ற அலுவலகங்களில் குறைந்த பட்சம் 2 ஆண்டுகளாவது பணியாற்றியிருக்க வேண்டும்.
தேர்வு முறை: தேர்வு மூன்று சுற்றுகளாக நடைபெறும். முதலாவதாக கணினி வழி தேர்வு, இரண்டாவது குரூப் டிஸ்கஷன், மூன்றாவது பர்சனல் இன்டர்வியூ. கணினி வழி தேர்வில் 100 அப்ஜெக்டிவ் டைப் வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். பார்ட் A, பார்ட் B என 2 பிரிவுகள் இருக்கும். அதில் பார்ட் A-வில் ஆப்டிடியூட், ரீசனிங் மற்றும் ஜெனரல் இங்கிலீஷ் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.
பார்ட் B-யில் டொமைன் நாலேஜ் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். தவறான பதிலுக்கு நெகட்டிவ் மார்க்கிங் உண்டு. 0.25 மதிப்பெண் கழிக்கப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு குரூப் டிஸ்கஷன் இருக்கும். அதைத்தொடர்ந்து பர்சனல் இன்டர்வியூ. தேர்வுக்கு 85 சதவீதமும், குரூப் டிஸ்கஷனுக்கு 5 சதவீதமும், பர்சனல் இன்டர்வியூக்கு 10 சதவீதமும் மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
SC, ST மற்றும் PwBD (மாற்றுத்திறனாளிகள்) பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இலவசம். இதர பிரிவினர் 1,000 ரூபாய் பிளஸ் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
சம்பள விவரங்கள்: கிரேட் A பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50,000 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் இதற்கான ஊதிய வரம்பு ரூ.50,000 முதல் 1,60,000 வரை இருக்கும். கிரேட் A0 பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. இவர்களுடைய வருமான வரம்பு ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை இருக்கும். கிரேடு E0 பிரிவிற்கு தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ.30,000. இவர்களுடைய வருமான வரம்பு ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை இருக்கும்.

