
மஹரகம பகுதியில் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாதுகாக்கப்பட்ட அரிய வகை கடல் சிப்பிகளை விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான அரிய வகை சங்குகளை விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபர் ஒருவர், மஹரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹொரகொல்ல தேசிய பூங்கா தலைமையகத்துக்கு கடந்த 4ஆம் திகதி கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே, இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரிடமிருந்து ‘லங்கா மேப் சிப்பிகள்’ (Lanka Map Shells) என அழைக்கப்படும் ஆறு ‘காசிஸ் கோர்னுடஸ்’ (Cassis cornutus) வகை சிப்பிகளும், மேலும் 18 வகையான முதுகெலும்பற்ற கடல் நத்தைகளின் சிப்பிகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட இந்த அரிய வகை கடல் சிப்பிகள் யாவும் சுமார் 15 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களும் நாளை 8ஆம் திகதி கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட கடல் நத்தைகளின் சிப்பிகளை உடமையில் வைத்திருத்தல், காட்சிப்படுத்துதல், கொண்டு செல்லுதல் மற்றும் வர்த்தகம் செய்தல் என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சட்டவிரோத வர்த்தகங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனஜீவராசிகள் திணைக்களம் எச்சரித்துள்ளது.

