Last Updated:
பாகிஸ்தானில் பலூஜ் லிபரேஷன் ஆர்மி எனும் கிளர்ச்சியாளர்கள் குழு, 400 பயணிகளுடன் சென்ற ரயிலை கடத்தியுள்ளது. இதில், பல ராணுவ வீரர்கள் இருக்கின்றனர்.
பலூஜ் லிபரேஷன் ஆர்மி எனும் கிளர்ச்சியாளர்கள் குழு பாகிஸ்தானில் இயங்கிவருகிறது. இந்தக் கிளர்ச்சி குழு இன்று பாகிஸ்தானில் ஒரு ரயிலையே கடத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகரை நோக்கி 9 பெட்டிகள் கொண்ட ரயில் புறப்பட்டது. அந்த ரயில், பலுஜிஸ்தான் எனும் பகுதிக்கு வந்துள்ளது. அப்போது பலூஜ் கிளர்ச்சியாளர்கள் ரயில் ஓட்டுநர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ரயில் ஓட்டுநர் காயமடையவே, அந்த ரயிலை கிளர்ச்சியாளர்கள் கடத்தி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்த ரயிலில் 400க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்திருக்கின்றனர். அதிலும், பல ராணுவ வீரர்கள் அந்த ரயிலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுமுறைக்காக தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ராணுவ வீரர்களும், பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவர்களும் அந்த ரயிலில் பயணம் மேற்கொண்டிருந்துள்ளனர். அந்த ரயிலை தான் தற்போது பலூஜ் கிளர்ச்சி அமைப்பு கடத்தியுள்ளது.
இதையும் படியுங்கள் : அமெரிக்கா மீது பதிலடி வரி விதிப்பு… கனடா புதிய பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு
கடத்தப்பட்ட ரயிலில் இருந்து பெண்களையும், குழந்தைகளையும் விடுவித்துவிட்டதாக அந்தக் கிளர்ச்சி குழு அறிவித்துள்ளது. அதேபோல், தங்கள் வசம் இருப்பவர்களை மீட்க ஏதும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டால், பிடித்துவைக்கப்பட்டிருப்பவர்களை சுட்டுக் கொல்லுவோம் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்தக் கிளர்ச்சியாளர்கள் குழு ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “இதுவரை ஆறு ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட பயணிகள் பிணைக் கைதிகளாக உள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
March 11, 2025 5:24 PM IST