Last Updated:
இந்தியாவின் ராணுவத் தேவைகள் மற்றும் பாதுகாப்புத் துறையில் அதன் ‘சுயசார்பு’ கொள்கைக்கு அமெரிக்கா முழுமையாக ஆதரவளிக்கும்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாடான ‘ஷாங்ரி-லா டயலாக்’ நிகழ்வில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் இந்தியாவின் ராணுவ பலம் மற்றும் அதன் நவீனமயமாக்கல் முயற்சிகளைப் பாராட்டிப் பேசியுள்ளார்.
செய்தி நிறுவனமான பிடிஐ-க்கு (PTI) அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
இந்தியா மிகவும் சக்திவாய்ந்த ஒரு நாடு. அது தனது ஆயுதப் படைகளைத் தொடர்ந்து நவீனமயமாக்கி வருகிறது. உயர்மட்ட சர்வதேச ராணுவ நடவடிக்கைகளை நீண்ட காலத்திற்குத் தொய்வின்றித் தொடரும் வகையில், மிகப்பெரிய தொழில்துறை மற்றும் பொருட்கள் பரிமாற்ற கட்டமைப்பு திறனை இந்தியா உருவாக்கி வருகிறது.
தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்க விரிவாக்கத்தைத் தடுத்து, பிராந்திய சமநிலையைப் பேணுவதில் இந்தியா ஒரு முதன்மையான காரணியாக மாறியுள்ளது என்று அமெரிக்கா கருதுகிறது. தனது சொந்த நலன்களைப் பாதுகாக்கும் திறன் கொண்ட ஒரு வலுவான இந்தியா உருவாவது, ஒட்டுமொத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் அமைதியைப் பேண வேண்டும் என்ற அமெரிக்காவின் கூட்டு வியூக இலக்குகளுக்குப் பெரிதும் வலுசேர்க்கும்.
எந்தவொரு நாடும் பிற சிறிய நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும், ஆதிக்கம் செலுத்தும் வகையிலும் நடந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது.
மேம்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை இரு நாடுகளும் இணைந்து தயாரிக்கும் திட்டங்களுக்கு வாஷிங்டன் நிர்வாகம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
இதற்கு உதாரணமாக, ‘ஜாவெலின்’ (Javelin) எனப்படும் அதிநவீன ஆண்டி-டேங்க் கைடட் ஏவுகணை அமைப்புகளை இரு நாடுகளும் இணைந்து தயாரிக்கின்றன. இத்தகைய கூட்டுப் பங்களிப்புகள் இரு நாட்டு ராணுவங்களின் தயார் நிலையை மேம்படுத்துவதில் மிக முக்கிய அடியாகும். என்று தெரிவித்துள்ளார்.
“ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்திவாய்ந்த நாடு!” – வியந்து பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்


