யார் இந்த ஜஸ்வந்த் சிங் கல்ரா: சட்டத்திற்க்கு கொண்டு வரப்பாடமேலே நடைபெறும் கொலைகள், குற்றமெதுவும் சாட்டப்படாமல் சிறை வைத்தல், நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படாமல் அடைத்து வைத்திருத்தல், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என பஞ்சாபில் நடந்த அரசு வன்முறைகளை உலகறியச் செய்தவர். பஞ்சாப் அகாலி தளம் கட்சியின் மனித உரிமைப் பிரிவின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். 1980,90களின் தொடக்கத்தில், பஞ்சாப் காவல்துறையினரால் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட’நூற்றுக்கணக்கான மக்களுக்கான போராடாடிய மனித உரிமை ஆர்வலர் இவர்.
இவரின் தொடர் முயற்சியால், காணாமல் போனவர்களின் நிலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் முக்கிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் விளைவாக, பஞ்சாபில் நடந்த பரவலான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இவரது வாழ்க்கை மற்றும் 1990-களில் பஞ்சாபில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, பாலிவுட் நடிகர் தில்ஜித் தோசான்ஜ் நடிப்பில் ‘சட்லஜ்’ திரைப்படம் உருவானது. இப்படம் முதலில் ‘கல்லுகாரா’ என்றும், பின்னர் ‘பஞ்சாப் ’95’ என்றும் பெயரிடப்பட்டது. திரைப்படத் தணிக்கை வாரியத்தின் பரிந்துரையை அடுத்து படத்தின் தலைப்பு ‘சட்லஜ்’ என மாற்றப்பட்டது. மேலும், படத்தில் வரலாற்று குறிப்புகளை நீக்கச் சொல்லியும் எழுந்த கடும் எதிர்ப்புகளால் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. பல எதிர்ப்புகளைத் தாண்டி 3 ஆண்டுகள் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ‘சட்லஜ்’ என்ற பெயரில் கடந்த 3 ஆம் தேதி ‘Zee5’ OTT தளத்தில் வெளியானது. ஆனால், படம் வெளியான 48 மணி நேரத்திற்குள் இந்தியாவில் OTT தளத்தில் இருந்து இந்த படம் நீக்கப்பட்டுள்ளது.
அரசு வன்முறைக்கு எதிராக தொடர்ந்து போராட்டக் களத்தில் ஈடுபட்டு வந்த அவர், செப்டம்பர் 6, 1995 அன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே பஞ்சாப் காவல்துறையினரால் பிடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடித்து, அவரது மனைவி பரம்ஜித் கவுர் கல்ரா உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். ஆனால், காவல்துறை அவரை கைது செய்யவில்லை என்று தொடர்ந்து மறுத்தது. இதையடுத்து, இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது.
ஜூலை 30, 1996 அன்று சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில், ஜஸ்வந்த் சிங் கல்ரா கடத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ததது. இந்த ஆள் கட்ததலுக்கு காரணமாக இருந்து 9 காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடரவும் பரிந்துரைத்தது. மேலும், சிபிஐ தனது அறிக்கையில், தரன் தரன் (Taran Taran) மாவட்டத்தில் உள்ள காங் காவல் நிலையத்தில் கடைசியாக கல்ரா அடைக்கப்பட்டிருந்தாகவும், அக்டோபர் 24, 1995-ல் அங்கிருந்து மாற்றப்பட்டதாகவும், அதற்குப் பிறகு அவருடைய நிலை என்னவென்றே தெரியவில்லை என்றும் தெரிவித்தது.
மேலும், கல்ரா வழக்கில் நீதித்துறை விசாரணைகள்யில் நீதியை கேலிக்கூத்தாக்கும் செயலாகவே அமைந்ததாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்தது. இதுகுறித்து, 1998 ஜுலலை மாதம் வெளியிட்ட அறிக்கையில், உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
மேலும், இந்த வழக்கில் கவனம் செலுத்திய குடும்ப உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்ககளை இலக்காகக் கொண்டு அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தும் போக்கு தொடர்வதாகவும் தெரிவித்தது. அரசு வன்முறையால் பாதுக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கான போராடிய ஒரு மனித உரிமைப் போராளியின் உடல் காணாமல் செய்யப்பட்டு பல தசாப்தங்களாக கண்டறியப்படாமல் இருப்பது இந்திய மனித உரிமை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது.

