மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 26 வெளிநாட்டினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இரண்டு நாட்களுக்கும் மேலாக நடந்த இத்தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் பாகிஸ்தான் தொழிலதிபர் தஹாவ்வூர் ஹுசைன் ராணாவிற்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மும்பை போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தஹாவ்வூர் ராணா 2008ம் ஆண்டு நவம்பர் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அதே மாதம் 11ம் தேதி இந்தியாவிற்கு வந்துவிட்டு அதேமாதம் 21ம் தேதி வரை இருந்துவிட்டு சென்றுள்ளான்.

ராணாவிற்கு மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராணாவும், டேவிட் ஹட்லீயும் இணைந்து இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியுள்ளனர். ராணா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களுடன் தாக்குதல் தொடர்பாக தொடர்பு கொண்டு பேசி இருக்கிறான். ராணாவும், டேவிட்டும் இது தொடர்பாக இமெயில் மூலம் தகவல்களை பகிர்ந்து கொண்டதும் தெரிய வந்தது. இதில் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் தீவிரவாதத்திற்கு உதவியதாக அமெரிக்க நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளான்.