கோலாலம்பூர்:
கோலாலம்பூர் மொத்த வியாபாரச் சந்தையில் நேற்று பணியில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர், அடையாளம் தெரியாத மர்ம நபரால் கூர்மையான உலோக ஆயுதத்தால் முதுகுக்குப் பின்னால் குத்தப்பட்டுப் பலத்த காயமடைந்தார்.
நேற்று காலை சுமார் 8.40 மணியளவில் இத்தீடீர் கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்ததாகச் செந்தூல் மாவட்டக் காவல் துறைப் பொறுப்புத் தலைவர் சுபரின்டென்டன் ஜாஸ்னி ஜோல்பா இன்று வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான அந்த ஆடவர் உடனடியாக மீட்கப்பட்டுச் செலாயாங் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட ஆடவரின் நண்பர் ஒருவர் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வப் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே, பச்சை நிறச் சட்டை அணிந்த ஆடவர் ஒருவர் முதுகில் கூர்மையான ஆயுதம் குத்தப்பட்ட நிலையில் கடுமையான வலியால் துடிக்கும் 47 வினாடிகள் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாக்குதலைச் செய்த மர்ம நபர் யார், இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் அல்லது முன்விரோதம் என்ன என்பது குறித்துச் செந்தூல் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



