Last Updated:
பெயர் குழப்பத்தால் ஒரு பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்த இந்த விசித்திரமான நிகழ்வு தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோரின் சந்திப்பு மற்றும் அதைத் தொடர்ந்து உருவான “மெலடி” (Melody) என்ற இணையதள மீம்ஸ் ட்ரெண்ட், இந்தியப் பங்குச்சந்தையில் ஒரு சுவாரசியமான மற்றும் விசித்திரமான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் மெலோனிக்கு இந்தியாவின் புகழ்பெற்ற “மெலடி” சாக்லேட்டுகளை பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோவை இத்தாலி பிரதமர் மேலோனி வெளியிட, அந்த நிகழ்வு இணையத்தில் வைரலானது.
இந்த வைரல் தருணத்தை அடுத்து, சமூக ஊடகங்களில் மெலடி சாக்லேட்டின் புகழ்பெற்ற விளம்பர வாசகமான “Melody itni chocolaty kyun hai” என்பது போன்ற பல மீம்கள் பரவத் தொடங்கின. அதைத் தொடர்ந்து சாக்லேட் விற்பனை அதிகரிக்கும் என்ற நோக்கில் சில்லறை முதலீட்டாளர்கள் பலரும் பங்குச்சந்தையில் “பார்லே” (Parle) என்ற பெயர் கொண்ட நிறுவனத்தின் பங்குகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்கத் தொடங்கினர்.
இதன் காரணமாக, மும்பை பங்குச்சந்தையில் (BSE) ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் பங்குகள் 5 சதவீத அப்பர் சர்க்யூட்டை எட்டி, ரூ. 5.25 ஆக உயர்ந்தது.
இருப்பினும், இந்த முதலீட்டு எழுச்சியின் பின்னணியில் ஒரு பெரிய தவறு நடந்துள்ளது. முதலீட்டாளர்கள் வாங்கிய ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ (Parle Industries) நிறுவனத்திற்கும், மெலடி சாக்லேட்டுகளை தயாரிக்கும் ‘பார்லே புராடக்ட்ஸ்’ (Parle Products) நிறுவனத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. பெயரில் உள்ள ஒற்றுமை காரணமாக, முதலீட்டாளர்கள் தவறான நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ளனர்.
இது குறித்து சிஎன்பிசி-டிவி18 ஊடகத்திற்குப் பேட்டியளித்த பார்லே புராடக்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மயங்க் ஷா, பிரதமர் மோடியின் இந்த செயல் இந்திய தயாரிப்புகளை உலகளாவிய மேடைக்குக் கொண்டு செல்லும் ஒரு சிறந்த முயற்சி என்று பாராட்டியுள்ளார். மேலும், தங்களது மெலடி சாக்லேட்டுகள் ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனையாகி வருவதாகவும், தற்போதைய சூழலில் தங்களது நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், அது ஒரு தனியார் நிறுவனமாகவே தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பிரதமரின் இந்த வைரல் செயல் தங்களது உண்மையான பார்லே புராடக்ட்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விற்பனையை மேலும் பலமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெயர் குழப்பத்தால் ஒரு பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்த இந்த விசித்திரமான நிகழ்வு தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
“மெலடி” சாக்லேட் கொடுத்த ட்ரீட்: பெயர் குழப்பத்தால் பங்குச் சந்தையில் எகிறிய பார்லே இண்டஸ்ட்ரீஸ்!


