
மட்டக்குளியில் மூவர் உயிரிழக்கக் காரணமான கோர விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட கஞ்சா போதையில் காரை செலுத்திய சாரதி செப்டெம்பர் 30 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு, மட்டக்குளி பகுதியில் மூன்று உயிர்களைப் பலிகொண்ட வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காரின் சாரதியை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், காரை செலுத்திய சாரதி கஞ்சா போதையில் இருந்தமை மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் விசாரணைகளின் ஊடாகக் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று காலை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை இரவு மட்டக்குளி பகுதியில் அதிவேகமாகப் பயணித்த கார் ஒன்று வீதியில் சென்ற ஏனைய வாகனங்களுடன் மோதி இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மூன்று முச்சக்கரவண்டிகள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்களுடன் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் பத்துப் பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியைப் பொலிஸார் உடனடியாகக் கைது செய்ததுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

