Last Updated:
நட்சத்திரப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூட இந்த போட்டியில் 54 ரன்களை வாரி வழங்கி மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய பின்னடைவு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்வி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா வருத்தத்துடன் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் 2026 தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், மும்பை அணி தனது வரலாற்றிலேயே முதல் இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ரன்களான 243 ரன்களைக் குவித்தது.
இருப்பினும், இந்த இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 பந்துகள் மீதமிருக்கையிலேயே எட்டிப் பிடித்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, “மும்பை இந்தியன்ஸ் என்றாலே ஒரு தனி அடையாளம் உண்டு, ஆனால் இந்த சீசனில் அந்த அடையாளத்திற்கு ஏற்றார் போல எங்களால் செயல்பட முடியவில்லை” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
வான்கடே மைதானத்தில் கடந்த 21 போட்டிகளில் டாஸ் வென்ற அணிகள் பந்துவீச்சையே தேர்வு செய்த நிலையில், ஹர்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அவர் நினைத்தாலும், இரண்டாம் பாதியில் பேட்டிங் செய்வது ஐதராபாத் அணிக்கு எளிதாக அமைந்தது.
இதுகுறித்து ஹர்திக் பாண்ட்யா மேலும் கூறுகையில், “நாங்கள் 244 ரன்கள் என்ற இலக்கை எங்களின் பந்துவீச்சாளர்கள் வெற்றியை பெற்றுத் தருவார்கள் என்று நம்பினேன், ஆனால் இன்று திட்டங்கள் சரியாக நிறைவேற்றப்படவில்லை. என்று தெரிவித்தார்.
பவர்பிளே ஓவர்களில் ஹைதராபாத் அணி 92 ரன்களைக் குவித்தது மும்பையின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. நமன் தீர் போன்ற வீரர்கள் கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டதும், முக்கிய விக்கெட்டுகளை எடுக்கத் தவறியதும் அணியை வெகுவாகப் பாதித்தது.
நட்சத்திரப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூட இந்த போட்டியில் 54 ரன்களை வாரி வழங்கி மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஷர்துல் தாக்கூர் போன்ற ‘இம்பாக்ட்’ வீரர்களை சரியாகப் பயன்படுத்தாததும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. அந்த அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேற இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

