அமெரிக்க பொது டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் கோகோ காப் ஆகியோர் 3ஆவது சுற்றில் வெற்றி பெற்றனர். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பொது டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டன்ஸ் உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய ஒசாகா 6-3, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் கிறிஸ்டினா புக்சாவை வீழ்த்தி 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆசிய ஜூனியர் ஹாக்கிப் போட்டி ஆடவர், மகளிர் ஆட்டங்களில் நடப்புச் சாம்பியன் இந்தியா அபார வெற்றி பெற்றது. சீனாவின் மொகுய் நகரில் ஆசிய ஜூனியர் ஹாக்கிப் போட்டி நடைபெறுகிறது. இதன் மகளிர் பிரிவில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது.
தொடக்க குவார்ட்டரில் இந்தியா பல்வேறு கோல்போடும் வாய்ப்புகளை உருவாக்கியது. 8ஆவது நிமிடத்தில் சனிகா கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தார்.தொடர் அழுத்தம் காரணமாக இந்தியாவுக்கு 2 பெனால்டி வாய்ப்புகள் கிட்டியும் கோலாக்க முடியவில்லை. தென்கொரியாவும் பதில் தாக்குதல் நடத்தியதில் 2 பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இந்திய தற்காப்பு அரண் வலுவாக இருந்ததால் கோலடிக்க முடியவில்லை.
30-ஆவது நிமிடத்தில் பூர்ணிமா யாதவ் கோலடித்தார். பூஜா சாஹு கோலடித்து 3-0 என முன்னிலையை அதிகரித்தார். கடைசி குவார்ட்டரிலும் 51ஆவது நிமிஷத்தில் இந்தியாவின் மது சிடர் அற்புதமாக கோலடித்தார். கடைசி விசிலுக்கு முன்னதாக தென்கொரியாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார் கில் கேபின். ஆடவர் பிரிவில் இந்திய அணி அபாரமாக ஆடி 14-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தியது.
நடப்பு சாம்பியன் இந்தியா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடத் தொடங்கியது. கேப்டன் அன்மோல் எக்கா, பிரண்தீப் சிங், அஜித் யாதவ் ஆகியோர் தங்களுக்கு இடையே 12 கோல்களை பகிர்ந்து கொண்டனர். இதில் பிரண்தீப் சிங் 5 கோல்கள் அடித்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். கேப்டன் அன்மோல் நான்கு கோல்களை பதிவு செய்தார். அஜித் யாதவ் அபாரமாக ஹாட்ரிக் கோலடித்தார். ஹர்பால், அஷு மௌர்யா இதர கோல்களை அடித்தனர். இந்தோனேசிய அணியால் இந்தியாவின் அபாரமான ஆட்டத்துக்கு பதில் தர முடியவில்லை. குரூப் ஏ பிரிவில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.
The post முன்னேறிய கோகோ காப், நவோமி ஒசாகா appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

