தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: எங்கு மோதிரங்கள் தயாரிக்கப்படுகின்றன? லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அடுத்த வாரம் அதாவது வரும் 15ஆம் தேதி முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளது. முதலமைச்சர் விஜய் பயனாளிகளுக்கு தங்க மோதிரம் வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார்.
தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கியமான ஒரு வாக்குறுதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். இதன்படி அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் என்ற முறையில் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். வரும் 15ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. முதலமைச்சர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இந்த திட்டத்தில் இலவசமாக ஒரு கிராம் தங்க மோதிரம் கிடைக்க உள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு தான் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்காக டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது பெரும் விவாத பொருளானது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திட்டத்தில் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பாக, ஆண்டுக்கு 4.41 லட்சம் குழந்தைகளுக்கு, தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரை எடுத்த நிறுவனங்கள் தங்க மோதிரங்களை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை தொடங்கி இருப்பதாக நாளிதழ்களில் வெளியாகி இருக்கும் செய்தி கூறுகிறது.
இந்த தங்க மோதிரங்களை இருப்பு வைப்பதற்காக 107 மையங்களில், அனைத்து நவீன அம்சங்களுடன் கூடிய பாதுகாப்பு பெட்டகம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் டெண்டரை எடுத்த ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் தினமலருக்கு அளித்த பேட்டியில் நான்கு கட்டங்களில் முதல் கட்டமாக, 89,955 மோதிரங்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த மோதிரங்களை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடப்பதாகவும் கூறியுள்ளார்.
சென்னை மற்றும் கோவையில் உள்ள 2 பிரத்யேக மையங்களில் பேக்கிங் செய்து அனுப்பும் பணி தொடங்கியது மோதிரங்களை உற்பத்தி செய்வது, ஹால்மார்க் முத்திரை பெறுவது, பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்வது மற்றும் விநியோகம் ஆகியவை எங்கள் பொறுப்பாகும் என அவர் கூறியுள்ளார்.
அந்த வகையில் சென்னை மற்றும் கோவையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான 1 கிராம் மோதிரங்கள் தயாரிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இந்த திட்டத்தில் கர்ப்பிணிகள் விண்ணப்பம் எதுவும் செய்ய வேண்டிய தேவையில்லை. இத்திட்டத்தின் மிக முக்கியமான தகுதி, குழந்தை அரசு மருத்துவமனைகளில் பிறந்திருக்க வேண்டும். குழந்தையின் பெற்றோர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால், பெண்கள் இதற்காக தனியாக தேடி அலைந்து விண்ணப்பிக்க தேவையில்லை. கர்ப்பிணிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தங்களின் கர்ப்பத்தை பதிவு செய்து PICME எண் பெற வேண்டும். அதன் மூலமாகவே இத்திட்டத்திற்கான விவரங்களும் தானியங்கி முறையில் சேகரிக்கப்படும். குழந்தை பிறந்தவுடன், சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை நிர்வாகமே குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆவணங்களை பெற்று இத்திட்டத்திற்கு பதிவு செய்யும். இதில் தகுதி பெற்ற பெற்றோருக்கு மெசேஜ் மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும்.

