ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “குடு சலிந்து” என அழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்னவுக்கு எதிராக பானந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இரண்டு வழக்குக் கோப்புகள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏழு பெண் அதிகாரிகள் உட்பட பத்து நீதிமன்ற ஊழியர்களிடம் காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக பானந்துறை பிரிவு சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன கோப்புகள்
காணாமல் போன கோப்புகளில் ஒன்று பானந்துறை வடக்கு பகுதியில் குடு சலிந்துவின் தூண்டுதலின் பேரில் நடந்ததாகக் கூறப்படும் கொலை வழக்கு தொடர்பானது என தெரிவிக்கப்படுகிறது.

மற்றொன்று குற்றப் புலனாய்வுத் துறையினால் (CID) பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு தொடர்பானது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஓகஸ்ட் 28 அன்று மனு மூலமாக நீதிமன்றத்தின் முன் இந்த வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சிஐடி அதிகாரிகளால் வழக்கு அறிக்கையைக் கண்டறிய முடியவில்லை.இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே வழக்குக் கோப்புகள் முழுமையாகக் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.
சிசிரிவி கமரா ஆய்வு
இந்தச் சம்பவம் தொடர்பாக பானந்துறை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் செப்டம்பர் 1 அன்று அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து, ‘பி அறிக்கை’ தாக்கல் செய்யப்பட்டு பானந்துறை பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேலதிக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

நகல்களைப் பெறுவதற்காக இந்த ஆவணங்கள் ஓர் அலுவலக உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் காப்பகத்தில் வைக்கப்பட்ட போதே காணாமல் போயுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிரிவி (CCTV) கமரா பதிவுகளை ஆய்வு செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

