Last Updated:
பஞ்சாப் மாநிலத்தில் விவாகரத்தான முன்னாள் மனைவியிடம் “மீண்டும் சேர்ந்து வாழலாம்” என்று நம்பிக்கை கொடுத்து அழைத்துச் சென்ற முன்னாள் கணவர் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 42 வயதான பெண் சரோஜ். இவர் தனது கணவர் குர்மீத் சிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று, பெற்றோருடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென முன்னாள் மனைவியை தொடர்புகொண்ட குர்மீத் சிங், “மீண்டும் சேர்ந்து வாழலாம்.. கடந்த கால பிரச்சினைகளை மறந்து புதிய வாழ்க்கையை தொடங்கலாம்” என்று உருகி உருகி பேசியதை கேட்டதும் சரோஜ் நம்பி விட்டார். புதிய வாழ்க்கை குறித்து நேரில் சந்தித்து பேச வருமாறு குர்மித்சிங் அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.
முன்னாள் கணவரின் பேச்சை நம்பிய சரோஜ், அவர் கூறிய இடத்திற்கு மகிழ்ச்சியுடன் சென்றுள்ளார். பாசில்கா மாவட்டத்தில் உள்ள மீரா சங்லா கிராமத்தின் ஒதுக்குப்புற பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனர். நீண்ட நாள் கழித்து சந்தித்த தம்பதி ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர்களுக்குள் சண்டை மூண்டுள்ளது. அங்கு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் வெடித்திருக்கிறது. “இரண்டு வருடம் கழித்தும் திருத்த வில்லை” என ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த குர்மீத் சிங் கூர்மையான ஆயுதத்தால் சரோஜை தாக்கியிருக்கிறார். இந்த எதிர்பாராத தாக்குதலில் பலத்த காயமடைந்த சரோஜ் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்து விட்டார். இப்படி நடக்கும் என எதிர்பார்க்காத குர்மித் சிங் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளார். பின் சடலத்தை அருகில் இருந்த வயல்வெளியில் புதைத்து தடயங்களை மறைக்க முயன்றிருக்கிறார்.
அந்த நேரத்தில், அருகில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அவரைக் கண்ட குர்மீத் சிங் அவசர அவசரமாக அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. சந்தேகமடைந்த ஆடு மேய்ப்பவர் கிராம மக்களுக்கு உடனே தகவல் தெரிவிக்க, அவர்கள் போலீசாருடன் அங்கு வந்துள்ளனர்.
வயல் வெளியில் மண்ணை தோண்டி பார்த்த போது சரோஜின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். துரிதகமாக செயல்பட்ட போலீசார் குர்மீத் சிங்கை அடுத்த சில மணி நேரங்களில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கொலை நடப்பதற்கு முன்பு, இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் பதிவிட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், கொலைக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Aug 03, 2026 10:00 PM IST


