Last Updated:
அடர்ந்த மக்கள் தொகை, தொலைதூரக் கிராமங்கள், பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சிக்கல்கள், மக்கள் மற்றும் வர்த்தக இடப்பெயர்வுகள் போன்ற காரணங்களால் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது சவாலாக மாறியுள்ளது.
எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கணிசமான அளவுக்கு உயிரிழந்து வருது ஐக்கிய நாடுகள் அவையை கவலை அடைய செய்துள்ளது.
குறிப்பாக ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பாதிப்பு மிக அதிவேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, காங்கோவில் எபோலாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 689 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்தத் தொற்றின் காரணமாக இதுவரை 139 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அன்று மட்டும் காங்கோவின் கிழக்கு மாகாணமான இத்தூரியில் 5 மரணங்கள் உட்பட 17 புதிய எபோலா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இது தவிர, சுமார் 64 மரணங்கள் உட்பட 168 பேருக்கு இந்தத் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது பரவி வரும் எபோலா தொற்றானது, ‘புண்டிபுகியோ’ எனப்படும் ஒரு குறிப்பிட்ட வைரஸ் வகையைச் சார்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த எபோலா பாதிப்பானது காங்கோவின் கிழக்கு மாகாணங்களான இத்தூரி, வடக்கு கிவு மற்றும் தெற்கு கிவு ஆகியவற்றில் உள்ள 29 சுகாதார மண்டலங்களை வெகுவாகப் பாதித்துள்ளது.
கடந்த மே 15 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த எபோலா அலையானது, 1976 ஆம் ஆண்டுக்குப்பிறகு காங்கோ சந்திக்கும் 17-வது எபோலா பாதிப்பாகும். மேலும், மே மாதத்தில் காங்கோ மற்றும் அதன் அண்டை நாடான உகாண்டாவிலும் இந்த எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது பரவி வரும் இந்த ‘புண்டிபுகியோ’ வகை எபோலா வைரஸிற்கு எதிராகப் பயன்படுத்துவதற்குச் குறிப்பிட்ட தடுப்பூசிகளோ அல்லது பிரத்யேக மருத்துவ சிகிச்சைகளோ இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும், இதற்கான மருத்துவப் பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அடர்ந்த மக்கள் தொகை, தொலைதூரக் கிராமங்கள், பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சிக்கல்கள், மக்கள் மற்றும் வர்த்தக இடப்பெயர்வுகள் போன்ற காரணங்களால் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது சவாலாக மாறியுள்ளது.
இதுதவிர, உயிரிழந்தவர்களின் உடல்களில் இருந்து மாதிரிகளை எடுத்துச் சோதனை செய்யப் பொதுமக்கள் காட்டும் தயக்கம், எபோலா சிகிச்சை மையங்களில் நிலவும் பற்றாக்குறை, வடக்கு கிவு பகுதியில் தொற்று தடுப்புப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் நோய் குறித்த எச்சரிக்கை புகார்களைத் தெரிவிப்பதில் உள்ள தொய்வு போன்றவை இந்தத் தடுப்புப் பணிகளைப் பெரிதும் முடக்கியுள்ளன.
மேலும், இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள 21.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதிப் பற்றாக்குறை நிலவுவதாகவும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்.. காங்கோவில் 139 பேர் உயிரிழந்துள்ளதால் ஐநா கவலை!

