மலேசியாவிற்குள் நிர்பந்த உழைப்பின் (Forced labor) மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் நுழைவதைத் தடுக்க ஒரு தெளிவான சட்டம் தேவை என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். இத்தகைய தடையை விதிக்க அல்லது அமல்படுத்த புத்ராஜெயா தவறிவிட்டது என்று அமெரிக்காவின் விசாரணை ஒன்று கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த கோரிக்கை எழுந்துள்ளது.
முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ கட்டாய உழைப்பைக் கொண்டு தயாரிக்கப்படும் இறக்குமதி பொருட்களுக்கு மலேசியாவில் பயனுள்ள தடை இல்லை என்பதைக் கண்டறிந்த பின்னர், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் மலேசிய தயாரிப்புகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்க முன்மொழிந்துள்ளது.
மலேசியா, குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட கட்டாய உழைப்பு அபாயங்கள் குறித்து பல ஆண்டுகளாகக் கடுமையான ஆய்வுகளை எதிர்கொண்டு வருகிறது.
“2023 உலகளாவிய அடிமைமுறை குறியீட்டின் மதிப்பீட்டின்படி, 2021 ஆம் ஆண்டில் மலேசியாவில் 1,000 பேரில் 6.3 பேர் நவீன அடிமைமுறையில் வாழ்ந்து வந்தனர். அதே நேரத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை அதன் 2025 மனித கடத்தல் தொடர்பான அறிக்கையில் மலேசியாவை ‘டயர் 2’ பிரிவில் சேர்த்துள்ளது.
உள்நாட்டுத் தொழில்துறைகளில், குறிப்பாக கையுறை, பாமாயில், மின்னணுவியல் மற்றும் உற்பத்தித் துறைகளில் உள்ள கட்டாய உழைப்புப் பிரச்சினையைக் களைய புத்ராஜெயா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெனகனிதா அமைப்பின் நிர்வாக இயக்குனர் குளோரின் தாஸ் கூறினார்.
இருப்பினும், மலேசியா ஒரு வர்த்தக நாடாக இருப்பதாலும், பொருட்கள், கச்சா பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் எல்லைகளைக் கடந்து வருவதாலும் இந்த நடவடிக்கைகள் மட்டுமே போதுமானதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
‘நமது சொந்த தொழிற்சாலைகளுக்குள் இருக்கும் கட்டாய உழைப்பை மட்டும் நாம் கவனித்துவிட்டு, இறக்குமதிகள், துணை ஒப்பந்தங்கள் மற்றும் பிராந்திய விநியோகச் சங்கிலிகள் மூலம் நமது சந்தைகளுக்குள் நுழைவதைப் புறக்கணித்தால், நாம் பிரச்சினையின் ஒரு பகுதியை மட்டுமே தீர்க்கிறோம்.’
நெறிமுறையற்ற ஆள்சேர்ப்பு, அதிகப்படியான கட்டணங்கள், கடன் பிணைப்பு, ஏமாற்றுதல், பாஸ்போர்ட் பறிமுதல், ஊதியத் திருட்டு மற்றும் மோசமான வாழ்க்கை நிலைமைகள் ஆகியவற்றின் மூலம் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை அடைவதற்கு முன்பே கட்டாய உழைப்பின் பயன்பாடு பெரும்பாலும் தொடங்கிவிடுகிறது என்று அவர் கூறினார்.
கட்டாய உழைப்பு தயாரிப்புகளுக்கான எந்தவொரு இறக்குமதி தடையும் வலுவான அமலாக்கம், விநியோகச் சங்கிலி சோதனைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பான புகார் அளிக்கும் வழிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று குளோரின் கூறினார்.
வர்த்தக ரீதியிலான அழுத்தங்கள் காரணமாக மட்டுமன்றி, எந்தவொரு தொழிலாளியும் சுரண்டல், துஷ்பிரயோகம் அல்லது கடத்தலுக்கு ஆளாகக்கூடாது என்பதற்காகவும் கட்டாய உழைப்பு ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கட்டாய உழைப்புக்கு எதிரான மலேசியாவின் நடவடிக்கைகளில் உள்ள குறைபாடு தொழிலாளர் சட்டங்களில் மட்டுமல்ல, மலேசியாவின் வர்த்தக அமைப்பிற்குள் நுழைந்த பிறகு கட்டாய உழைப்புடன் தொடர்புடைய பொருட்களைக் கையாள்வதில் மலேசியாவிற்கு இருக்கும் இயலாமையிலும் உள்ளது என்று நார்த்-சவுத் இனிஷியேட்டிவ் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஏட்ரியன் பெரேரா கூறினார்.
தயாரிப்புகள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பில், குறிப்பாக சீனாவில் உள்ள உய்குர் மக்கள் மத்தியில் கட்டாய உழைப்பு பயன்படுத்தப்படுவது குறித்து கடந்த காலங்களில் அமெரிக்கா தெரிவித்த கவலைகளிலிருந்தும் இப்பிரச்சினை ஓரளவு உருவாகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
கட்டாய உழைப்பு அல்லது நியாயமற்ற தொழிலாளர் சார்ந்த சாதகமான அம்சங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மலேசியாவின் போட்டித்தன்மை சட்டங்கள் இதுவரை சோதனைக்குள்ளாக்கப்படவில்லை என்றும், அவை இறக்குமதி-ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நேரடியாகக் கையாள்வதில்லை என்றும் பெரேரா கூறினார்.
நாட்டிற்குள் நுழையும் அல்லது வெளியேறும் சந்தேகத்திற்குரிய பொருட்களைக் கையாள்வதற்கு ஒரு முறையான வழிமுறை தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் உரிமைகளில் அமெரிக்கா ஒன்றும் ‘புனிதர் அல்ல’ என்றாலும், பலவீனமான அமலாக்கம், நெறிமுறையற்ற ஆள்சேர்ப்பு, கடன் பிணைப்பு அபாயங்கள் மற்றும் தண்டனையிலிருந்து தப்பிக்கும் போக்கு ஆகியவற்றின் மூலம் மலேசியா கட்டாய உழைப்பு குற்றச்சாட்டுகளுக்கு இடம் கொடுத்துள்ளதாக கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ கூறினார்.
அமெரிக்கா பாசாங்குத்தனமாக செயல்படுகிறதா என்பது கேள்வியல்ல. நிச்சயமாக அது அப்படித்தான் செயல்படுகிறது. (ஆனால் கேள்வி என்னவென்றால்) மலேசியா ஏன் தனது தொழிலாளர்களை இந்த அளவுக்குப் பாதுகாப்பற்ற நிலையில் விட்டுள்ளது, இதனால் பாசாங்குக்காரர்கள் அவர்களின் துயரத்தை ஆயுதமாகப் பயன்படுத்த முடிகிறது?’ என்று அவர் எக்ஸ் (X) தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
-fmt
