Tamilnadu
oi-Vignesh Selvaraj
தேனி: சுதந்திர தினத்தையொட்டி, முன்னாள் முதலமைச்சரும், திமுக எம்.எல்.ஏவுமான ஓ.பன்னீர்செல்வம், தேனியில் உள்ள தனது வீட்டில் இன்று தேசியக்கொடி ஏற்றி தொண்டர்களுக்கு மிக்சர் பாக்கெட் கொடுத்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உடனான மோதலைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். எனினும், கட்சிக்கு தான் தான் தலைமை எனக் கூறி சட்டப் போராட்டம் நடத்தி வந்தார். இதில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை நடத்தி வந்தார்.

தனிக் கட்சியைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ். ஓபிஎஸ்ஸுக்கு போடி நாயக்கனூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது திமுக. போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார் ஓபிஎஸ்.
திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு திமுகவில் கட்சி பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. விரைவில் திமுகவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாநில பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, முன்னாள் முதலமைச்சரும், திமுக எம்.எல்.ஏவுமான ஓ.பன்னீர்செல்வம், தேனியில் உள்ள தனது வீட்டில் இன்று தேசியக்கொடி ஏற்றினார். தேசியக்கொடி ஏற்றி, சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார் ஓபிஎஸ். பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு லட்டு மற்றும் மிக்சர் அடங்கிய பாக்கெட்களை கொடுத்துள்ளார்.
திரைப்படம் ஒன்றில், சீரியஸான நேரத்தில் அமைதியாக அமர்ந்து ‘மிக்சர்’ சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டு, அரசியல் நிகழ்வுகள், சர்ச்சைகள் அல்லது முக்கிய விவாதங்களின் போது அமைதியாக இருக்கும் தலைவர்களைச் சுட்டிக்காட்ட ‘மிக்சர்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அரசியல் நிகழ்வுகள், அதிமுகவில் பல்வேறு அரசியல் திருப்பங்கள் மற்றும் தலைமை மாற்றங்கள் நிகழ்ந்த காலங்களில், தீவிரமான எதிர்ப்பையோ அல்லது அதிரடி முடிவுகளையோ வெளிப்படுத்தாமல் அமைதி காத்ததால், ஓபிஎஸ்ஸை மிக்சர் என சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றிவிட்டு தொண்டர்களுக்கு லட்டு மற்றும் மிக்சர் அடங்கிய பாக்கெட்களை விநியோகித்துள்ளார் ஓபிஎஸ். இதனைக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அப்போதைய முதல்வர் ஓபிஎஸ் வீட்டுக்கு முன்பாக மிக்சர் சாப்பிடும் அமைதிப் போராட்டத்தில் சிலர் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

