கோலாலம்பூர்:
ஜோகூர் மாநிலம், ரெங்கிட் பகுதியில் உள்ள தாமான் பாரிட் லாபிஸ் ஸ்ரீ லடாங்கல் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஜூலை 25ஆம் தேதி, 17 வயதுடைய மாற்றுத்திறனாளி (OKU) சிறுமியின் காணொளியில் அவரது இடது கை பெருவிரல் குறைபாட்டைச் சுட்டிக்காட்டி இணையம் வாயிலாக கேலி மற்றும் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படும் இரண்டு 17 வயது பள்ளி மாணவர்கள் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நீதிபதி முஸ்தாகீம் சுகர்னோ முன்பாகத் தனித்தனியாகப் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட இரு மாணவர்களும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் துணைப் அரசு வழக்கறிஞர் நூர் ஷாஸ்லின் இப்ராஹிம் தெரிவித்தார்.
இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்காகவும், நன்னடத்தை அறிக்கையையும், ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்காகவும் வழக்கு வருகிற அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தலா RM1,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.



