ஒதுக்கீடுகளை வழங்குவதிலும், முதலீடுகளை ஈர்ப்பதிலும் புத்ராஜெயா (மத்திய அரசு) எந்தவொரு மாநிலத்திற்கும் எதிராக அரசியல் பாகுபாடு காட்டுவதோ அல்லது புறக்கணிப்பதோ இல்லை என்று பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார்.
மாறாக, வளர்ச்சியின் பலன்கள் அனைத்து மக்களுக்கும் சமமாக சென்றடைவதை மத்திய அரசு உறுதி செய்கிறது என்று அவர் கூறினார்.
மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (Mida) தலைவருமான ஜஃப்ருல், கடந்த ஆண்டு ஜொகூர் மாநிலம் ரிம 110 பில்லியன் என்ற அதிகப்படியான சந்தை முதலீட்டைப் பதிவு செய்ததே இந்த அர்ப்பணிப்பிற்கு சான்றாகும் என்றார். இதன் மூலம், அரசாங்கம் ஒரு மாநிலத்தின் அரசியல் நிறத்தைப் பார்க்காமல், அதன் பொருளாதாரத் திறன் மற்றும் வளர்ச்சித் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கிறது என்பதை இது காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“உதாரணமாக, நாங்கள் ‘மிடா’ (MIDA) அமைப்பாக டோக்கியோ, ஒசாகா, சீனா அல்லது சியோல் போன்ற இடங்களுக்குச் செல்லும்போது, சிலாங்கூர் அல்லது பினாங்கு மாநிலங்கள் பக்காத்தான் ஹராப்பான் (PH) நிர்வாகத்தின் கீழ் இருப்பதால், அங்கு மட்டும் முதலீடுகளைக் கொண்டு செல்லுங்கள் என்று நாங்கள் ஒருபோதும் கூறுவதில்லை. நாங்கள் அந்த கோணத்தில் பார்ப்பதில்லை”.
“எங்களைப் பொறுத்தவரை, வளர்ச்சி அனைத்து மலேசியர்களாலும் உணரப்பட வேண்டும் என்பதே முக்கியம்,” என்று செகாமட் மாவட்டத் தொழில்துறையினருடனான சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு பெர்னாமாவிடம் அவர் கூறினார்.
ஹராப்பான் தலைவருமான பிரதமர் அன்வார் இப்ராஹிம், சில அரசியல் காரணங்களுக்காகவே மாநிலத் தேர்தலை முன்னிட்டு ஜொகூரின் வடக்கு பகுதியில் அதிக கவனம் செலுத்துகிறார் என்று சில தரப்பினர் எழுப்பியுள்ள கருத்துகளுக்குப் பதிலளிக்கும் போதே ஜஃப்ருல் இதனைத் தெரிவித்தார்.
வளர்ச்சி இடைவெளிகளைக் குறைத்தல்
ஜொகூரின் வடக்கு பகுதிக்கு மத்திய அரசுத் தலைவர்கள் அடிக்கடி உத்தியோகபூர்வமாக வருகை தருவது, அங்குள்ள வளர்ச்சி இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு அங்கீகாரமாகும் என்று அவர் விளக்கினார். ஏனெனில் இப்பகுதி இதற்கு முன்பு குறைந்த கவனத்தையே பெற்றிருந்தது.
“நியாயமாகச் சொல்ல வேண்டுமென்றால், பிரதமர் ஜொகூரின் வடக்கு அல்லது தெற்கு பகுதியை மட்டும் பார்க்காமல், அனைத்து மாநிலங்கள் மற்றும் ஜொகூரின் அனைத்துப் பகுதிகள் மீதும் கவனம் செலுத்தி வருகிறார்”.
ஆனால், இந்த வடக்கு பகுதிக்கு இதற்கு முன்பு ஜொகூர் மாநில அரசிடமிருந்து போதிய ஆதரவோ அல்லது கவனமோ கிடைக்கவில்லை என்பதைப் பிரதமர் அங்கீகரித்துள்ளார்.
“அதனால்தான், அனைத்து நிலைகளிலும் பகுதிகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்த விரும்புகிறோம் என்பதைக் காட்டுவதற்காக, வடக்கு ஜொகூரில் தொடர்ச்சியான சுற்றுப்பயணங்களைத் தொடங்கியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.
மத்திய அரசு தங்களைப் புறக்கணிப்பதாக மாநில நிர்வாகம் கூறுவது, எதிர்மறையான எண்ணத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் வெறும் அரசியல் கூற்று மட்டுமே என்று ஜஃப்ருல் கூறினார்.
தற்போது ஜொகூரில் ஏற்பட்டுள்ள அசாதாரண பொருளாதார வளர்ச்சி, மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே உள்ள நெருக்கமான ஒத்துழைப்பினால் உந்தப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.
ஜொகூர் மாநிலத் தேர்தல் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள வேளையில், முன்கூட்டிய வாக்குப்பதிவு ஜூலை 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.

