மலாக்கா, பேராக் மாநிலங்களைச் சேர்ந்த பெர்மிம் அமைப்பின் இணைப்புச் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன், பெர்மிமின் புதிய நிர்வாகக் குழுவினரின் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் அமர்வு சமீபத்தில் மலாக்காவின் ஆயர் கெரோ மற்றும் பேராக் மாநிலத்தின் தைப்பிங்கில் நடைபெற்றது.
தனித்தனியாக நடைபெற்ற இந்த சந்திப்புகள் சிறப்பான வரவேற்பும் உற்சாகமான பங்கேற்புமுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றன. மலாக்கா மற்றும் பேராக் மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு இணை அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, தங்களது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தினர் என்று பெர்மிம் தலைவர் முஹம்மது அஸ்மான் ஷாஹ் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல் அமர்வுகள், சமூக அமைப்புகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றியதாக அவர் குறிப்பிட்டார். பங்கேற்பாளர்கள் தங்களது அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு, சிறந்த யோசனைகள் மற்றும் பயனுள்ள பரிந்துரைகளை வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன. இக்கருத்துக்கள் எதிர்கால செயற்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்கான முக்கிய வழிகாட்டுதலாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டது.
மேலும், எதிர்காலத்தில் உள்ள குறைகளைச் சீர்செய்து, கூட்டுச் செயல்பாடுகளை வலுப்படுத்தி, சமூக நலனுக்காக வெற்றிப் பாதையில் தொடர்ந்து முன்னேறப்படும் என்றும், அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்றும் பெர்மிம் தலைவர் அஸ்மான் ஷாஹ் உறுதியளித்தார்.
மேலும் கூறுகையில், ஈப்போவில் அமைந்துள்ள பிரிம் என்றழைக்கப்படும் “பெர்சாத்துவான் இந்திய முஸ்லிம் பேராக்” அமைப்பின் புதிய கட்டிடத்திற்கு மரியாதை நிமித்தமாகச் சென்று, அந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.






